Friday, 15 November 2013

புத்தகங்கள் அழியுமா ?

ஒவ்வொரு புதிய தொழில் நுட்பம் வரும்போதும் பழைய தொழில் நுட்பத்துக்கு அச்சுறுத்தல் எழும் என்பதை மறுக்க முடியாது. “ஊருக்கு போனதும் மறக்காம கடுதாசி போடுப்பா” என்று இப்போது யாராவது சொல்கிறார்களா ? அவர்களுக்கு செல்போனும், எஸ்.எம்.எஸ் ம் பக்க துணையாய் இருக்கின்றன.

பிறந்தநாள், தீபாவளி, பொங்கல் என வரிசையாய் வரும் பண்டிகைகளுக்காக கடைகளில் போய் வாழ்த்து அட்டைகள் வாங்குவது பழைய பல்லவி. இப்போது எல்லாம் மின்மயம். ஏதோ ஒரு இணையப் பக்கத்தில் போய் ஒரு வாழ்த்தை கிளிக் பண்ணி மெயில் பண்ணிவிட்டால் விஷயம் முடிந்தது !

தந்தி, தந்தி என்றொரு சமாச்சாரம் இருந்தது ஞாபகம் இருக்கிறதா ? அதை இனிமேல் அரசியல் தலைவர்களின் பேட்டிகளில் தான் கேட்க முடியும். எந்த பிரச்சினையானாலும் “பிரதமருக்கு தந்தி கொடுப்பது” அவர்கள் மட்டும் தான். மற்ற எல்லோருமே மின்னஞ்சல், போன், எஸ்.எம்.எஸ், 3ஜி என எங்கேயே போய்விட்டார்கள்.

இப்படியே வழக்கொழிந்து போன விஷயங்கள், அல்லது புதுமையான வகையில் உருமாறிய விஷயங்கள் நிறையவே உண்டு. இப்போது அந்தப் பட்டியலில் நமது புத்தகங்களும் இணைந்து விடுமோ எனும் நிலை உருவாகி வருகிறது.

மென்புத்தகங்களின் வருகையும், அதை வாசிக்க வசதியாக வந்திருக்கின்ற ரீடர்கள், டேப்லெட்கள் போன்றவையும் அச்சுப் புத்தகங்களின் வளர்ச்சியை அசைக்கத் துவங்கியிருக்கின்றன. உலக அளவில் அச்சுப் புத்தகங்களின் விலை பெருமளவு குறைக்கப்பட்டிருப்பதாய்ச் சொல்கிறது இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று.

ஒரு புத்தகத்தைச் சுமக்கும் எடையில் ஒரு புக் ரீடரை நீங்கள் தூக்கிச் சுமக்கலாம். சொல்லப் போனால் ஒரு நாவல் சுமார் 300 கிராம் எடை உண்டு. ஆனால் பொதுவான ரீடர்கள் 200 கிராம் எடையை விடக் குறைவு தான். அதில் சுமார் 1400 நாவல்களைச் சேமிக்கலாம். இப்படி மிக எளிமையான வாய்ப்பு வந்திருப்பதால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக புத்தகங்களை விட்டு விட்டு மென் பக்கமாய் தலை சாய்க்கத் துவங்கியிருக்கிறார்கள்.

பயணத்தின் போதெல்லாம் ரீடர்கள் ரொம்பவே உதவியாக இருக்கும் என்பதைச் சொல்லவும் தேவையில்லை. இந்த ஆண்டைய முதல் காலாண்டு புள்ளி விவரம் என்ன சொல்கிறது தெரியுமா ? சுமார் 25% அச்சுப் புத்தகங்கள் விற்பனைச் சரிவு ஏற்பட்டிருக்கிறதாம். நீல்சனின் அறிக்கைபடி கடந்த ஆண்டில் சுமார் 11% அச்சுப் புத்தக விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது !

“அச்சுப் புத்தகங்களின் வீழ்ச்சி கண்கூடு. 2020ல் அச்சுப் புத்தகங்கள் ரொம்பக் கொஞ்சமே இருக்கும். மென்புத்தகங்களே ஆட்சி புரியும்”  என்கிறார் புகழ் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான ஜி.பி.டெய்லர்.

இசை உலகை எடுத்துக் கொண்டால் இன்றைக்கு சிடிக்களின் விற்பனை ரொம்பக் கம்மி. அதுவும் ஆப்பிள் தயாரிப்புகளான ஐபாட் போன்றவை அறிமுகமானபின் வெளிநாடுகளில் சகட்டு மேனிக்கு சரிவு ஏற்பட்டது. காரணம் மக்கள் பெரும்பாலும் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்வதை விரும்பியது தான்! ஐ-டியூன் போன்ற பணம் கொடுத்து இறக்குமதியாகும் தளங்களில் விற்பனை ஜோராக நடக்கிறது. இதே நிலை இனிமேல் புத்தகங்களுக்கும் வரும்.

எப்போது வேண்டுமானாலும் பிடித்தமான நூலை தரவிறக்கம் செய்து வாசிக்கலாம் எனும் நிலை வரும். இதனால் நூலுக்காக கடை கடையாய் ஏறி இறங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆர்டர் கொடுத்து விட்டு வாரக் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

புத்தம் புதிய நாவல்களும் மென்வடிவமாகவே தயாரானால் “ஹாரி பாட்டர்” கணக்கான ரசிகர்கள் கொட்டும் பனியில் புத்தகத்துக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. சுற்றுப்புறச் சூழலுக்கும் இது ரொம்ப நல்லது. மரங்கள் பிழைக்கும். பெரிய பெரிய அச்சு நிறுவனங்களெல்லாம் ஓய்வெடுக்கும் !

ஹாரிபாட்டர் என்று சொன்னதும் நினைவுக்கு வருகிறது. சமீபத்தில் ஹாரிபாட்டர் நாவல்கள் மென் வடிவம் பெற்றன. சில நாட்களிலேயே சுமார் 8 கோடி ரூபாய்களுக்கான நூல்கள் விற்றுத் தீர்ந்தன ! ஒவ்வொரு நிமிடமும் சுமார் 20,000 ரூபாய்க்கான விற்பனை ஹாரிபாட்டர் மூலம் நடந்து கொண்டிருக்கிறதாம் !

மென்புத்தகங்களின் விலை மிகவும் குறைவாக இருப்பதால் அதன் விற்பனை எண்ணிக்கையும் மிக அதிக அளவில் இருக்கிறது. புத்தக வாசனை வேண்டும், சேமிக்க வேண்டும் எனும் எண்ணம் உடையவர்கள் இன்னும் அச்சுப் புத்தகங்களையே நாடி வருகின்றனர்.

மென்புத்தகங்களின் வளர்ச்சி வரவேற்கப்பட வேண்டியதே ! படிக்கும் பழக்கம் அதன் மூலம் அதிகரித்தால் இரட்டை மகிழ்ச்சி !

விக்கிபீடியா வழங்கும் முன்னோட்ட வசதி!

விக்கிபீடியாவை மேம்படுத்தும் வகையில் புதிய வசதிகள் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வசதிகளை விக்கிபீடியா ஆர்வலர்கள் முன்கூட்டியே பரிசோதித்து பார்க்கும் முனோட்ட வசதியும் அறிமுகமாகியுள்ளது.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவை நிர்வகித்து வரும் விக்கிமீடியா அமைப்பு இதை அறிவித்துள்ளது.
இணைய பயனாளிகளின் பங்களிப்போடு உலகின் மாபெரும் கலைக்களஞ்சியமாக உருவாகி இருக்கும் விக்கிபீடியாவை மேலும் பரவலாக அனைவரிடமும் கொண்டு செல்லும் முயற்சியில் விக்கிமீடியா அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதிய வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தப் புதிய வசதிகளை அறிமுகம் நிலையிலேயே பயனாளிகள் அறிந்துகொண்டு அவற்றை பயன்படுத்திப் பார்க்கும் முன்னோட்ட வசதியை விக்கிமீடியா அமைப்பு அறிமுகம் செய்துள்ளது. அதாவது அனைவருக்கும் முன்பாகவே புதிய வசதிககளை ஆர்வம் உள்ளவர்கள் பரிசோதித்து பார்க்கும் விஷேச வசதி.

இந்த வகையான முன்னோட்ட வசதி மென்பொருள் உலகில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இந்த முறை பீட்டா என்று அழைக்கப்படுகிறது. முழுவீச்சில் அறிமுகம் ஆகும் முன் மென்பொருளை குறிப்பிட்ட சிலருக்கு வழங்கி அவர்கள் பயன்பாட்டில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு ஏற்ப குறைகள் நீக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட நிலையில் புதிய மென்பொருள் அறிமுகமாக இந்த வசதி உதவுகிறது.

இப்போது விக்கிபீடியாவில் அறிமுகமாகும் புதிய வசதிகளையும் பயனாளிகள் இப்படி முன்கூட்டியே பயன்படுத்தி பார்த்து அதன் குறை நிறைகளை தெரிவிக்கலாம் என விக்கிமீடியா அமைப்பு அறிவித்துள்ளது.

விக்கிபீடியா மட்டும் அல்லாமல் அதன் மற்ற துனண சேவைகளுக்கும் இது பொருந்தும். விக்கி சமூகத்தினர் பங்கேற்கும் டிஜிட்டல் சோதனை கூடமாக இதை கருதலாம் என்றும் விக்கிமீடியா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பீட்டா ஃபீச்சரஸ் எனும் பெயரில் இந்த முன்னோட்ட வசதி அறிமுகமாகியுள்ளது. விக்கி தளத்தில் உள்ள முன்னுரிமை பகுதிக்கு சென்று இந்த திட்டத்தில் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு:

  https://www.mediawiki.org/wiki/About_Beta_Features

இந்திய சிகரெட்டில் நிகோடின் அதிகம் ; ஆண்‌டுதோறும் கேன்சர் நோய் அதிகரிப்பு!

 உலக அளவில் ஒப்பிட்டு பார்க்கும்போது வரையறுக்கப்பட்ட அளவை கட்டிலும் இந்திய சிகரெட்டுகளில் அதிக நிகோடின் மற்றும் கேடு விளைவிக்கும் தார் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது புகைப்பிடிப்போர்களின் உடல் நலத்தை வெகுவாக பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்தியாவில் மத்திய அரசு தரப்பில் ஆய்வுக்கூடங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தலைமை ஆய்வுக்கூடம் முதன்முதலில் பஞ்சாப் மாநிலம் சண்டிகாரிலும் , தொடர்ந்து முக்கிய நகரங்களில் மண்டல அலுவலகங்களிலும் அமைக்கப்படுகிறது.

கண்காணிப்பு தொழிலகம் வருகிறது :

இது குறித்து மத்திய சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில்: லாபம் மற்றும் விற்பனையின் முக்கியத்துவம் கருதி இந்திய சிகரெட்டுகளில் அதிக நிகோடின் அளவீடு கொண்ட சிகரெட் விற்கப்படுகிறது. இது உலக அளவின் வரைமுறையை விட அதிகம். மத்திய புகையிலை ஆய்வு தொழிற்கூடம் சமீபத்தில் சிகரெட்டுகளை ஆய்வு செய்ததில் உயர்மட்ட அளவில் நிகோடினும், தாரும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது மிக ஆபத்தான விஷயம் என்கின்றனர் இந்த அதிகாரிகள்.

10 மில்லி கிராம் தார் :

உலக அளவில் கட் ஆப் ரேஞ்ச் படி ஒரு சிகரெட்டில் 10 மில்லி கிராம் தார் அளவு இருக்கலாம். ஆனால் இந்திய சிகரெட்டுகளில் 15 மி. கிராம் தார் இருப்பதாக கூறுகின்றனர். அது போல் அனுமதிக்கப்பட்ட நிகோடின் அளவை விட நிகோடின் அதிகம் உள்ளது. அதாவது ஒரு சிகரெட்டில் அனுமதிக்கப்பட்ட நிகோடின் அளவு ஒரு மில்லிகிராம். இதனை விட அதிகம் அளவீடு இருப்பதாகவும் தெரிகிறது.

 இது மத்திய புகையிலை சட்டத்தின் மீறல் ஆகும்.
சென்னை, மும்பையில் ஆய்வு மையம்: இது போன்ற சிகரெட் அளவீடுகளை கண்காணிக்க சண்டிகாரில் ஒரு தலைமை ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். இது போல் மண்டல அளவில் சென்னை, மும்பை, ஆமதாபாத், கோல்கட்டா, நகரங்களிலும் அமைக்கப்படும். இதற்கான ஆயத்த பணியில் மத்திய சுகாதார அதிகாரிகள் சண்டிகார் செல்லவுள்ளனர். இங்கு சில ஆய்வு பணிகளை மேற்கொள்கின்றனர். இந்த ஆய்வகத்தில் பணியாற்றும் நிபுணர்களுக்கு அமெரிக்காவின் ஜாவ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி மூலம் சில பயிற்சிகள் நடத்தப்படும். மேலும் நகரங்களில் காற்றில் நிகோடின் அளவு குறித்த மானிட்டர்களும் நிறுவப்படவிருக்கிறது.

மேலும் சிகரெட்டுகள் தயாரிப்பு விவரங்கள் அதில் உள்ள கன்டெய்ன்ஸ் தகவல்கள் துல்லியமாக சிகரெட் பாக்கெட்டுகளில் இடம் பெறவேண்டும் என்ற ஒரு புதிய நடைமுறை மற்றும் பல்வேறு விதிமுறைகளும் கொண்டு வரப்படவிருப்பதாக மத்திய சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது போன்று செயல்படும் நேரத்தில் நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் நோய் அளவை குறைக்க முடியும் என மருத்துவ ஆர்வலர்கள் தெரிவித்தனர்,

30 லட்சம் பேருக்கு கேன்சர் :

சமீபத்திய மத்திய அரசின் புள்ளிவிவர கணக்கின் படி நாட்டில் 29 லட்சம் பேர் கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறதாம் .