Wednesday, 18 September 2013

'ஆலப்புழா' - சுற்றுலாத்தலம்


'ஆலப்புழா'

ஆலப்புழா
 
'லப்புழா' என்றதும் பெரிய பெரிய படகு வீடுகளும் அலைஇல்லாத கடலும்,முகத்துவாரம் என்னும் கடலும் ஆறும் சங்கமிக்கும் நீர்ப்பரப்பும் தமிழ் மற்றும் கேரள  சினிமாக்களின் கனவு பாடல் காட்சிகளும் நினைவுக்கு வரும்  சுற்றிலும் நீலநிறத்தில் தண்ணீரும்.. பச்சை நிறத்தில் மரங்களும் சூழ்ந்த அந்த அற்புத பூமியை  இப்போது அறிவோம் 
 
ஆலப்புழா இத்தாலி நாட்டின் வெனிஸ் நகருக்கு இணையான அமைப்பை உடையது. வெனிஸ்  நகர மக்கள் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு செல்வதென்றால் கூட படு வழியாகத்தான் பயணம் செய்வார்கள். கிட்டத்தட்ட ஆலப்புழாவும் அப்படிப்பட்டதுதான். அனைத்து பொருட்களும் படகு வழியாகத்தான் வீடுகளுக்கு வருகிறது.
இதனால் ஆலப்புழாவை கேரளாவின் வெனிஸ் என்று அழைக்கிறார்கள். ஆலப்புழா அத்துணை ரம்யமான நகரம். காதல் ஜோடிகள் முதல், கல்யாணம் ஆன தம்பதிகள் வரை அனைவரும் விரும்பும் ஓர் இடமாக ஆலப்புழா விளங்குகிறது.

ஊரை சுற்றிலும் ஆறுகள், ஏரிகள், அடர்ந்த பசுமையான மரங்கள் இவை அனைத்தும் இயற்கை அன்னையின் மடியில் நம்மை தவழச் செய்கிறது
இங்கு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பாம்பு படகு சவாரி உலக புகழ் பெற்றது. மற்றும் விடுமுறை காயல் வீடுகள், கடற்கரைகள், கடல் உற்பத்திப் பொருட்கள் மற்றும் தேங்காய் நார் தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்குப் புகழ்பெற்ற இடமாக உள்ளது.
கடல் வரை பரந்து காணப்படும் இங்குள்ள கப்பல் துறை 137 வருட பழைமை வாய்ந்தது.  இக்கடற்கரை மிகத்தூய்மையாகவும், அழகாகவும் ராமரிக்கப்படுகிறது இக்கடற்கரையின் தெற்குப் பகுதியில் குழந்தைகள் விளையாட தனிப்பூங்கா ஒன்றும்அமைக்கப்பட்டுள்ளது.
 
படகு இல்லம்:
 
லப்புழாவில் இருக்கும்போது நாம் காணும் மிகவும் அருமையான ஒரு அனுபவம் படகு இல்லப் பயணமாகும்.
நாம் ஆலப்புழாவிலுள்ள காயல்களில் பழையகாலத்து கட்டுவள்ளங்களின் மறுபதிப்புகளைக் காணலாம்.
அசலான கட்டுவள்ளம் அல்லது அரிசி தோணிகள் டன் கணக்கான அரிசி மற்றும் நறுமணப் பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுவது வழக்கம்.
கட்டுவள்ளம் அல்லது முடிச்சோடு கூடிய படகு என இது அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது முழு படகும் கயிற்றினால் மட்டுமே கட்டப்பட்டு ஒரு படகாக உருவாக்கப்பட்டிருக்கும்.பின்னர் ஒரு ஹோட்டல் போன்று நன்றாக அலங்கரிக்கப்பட்ட படுக்கை அறைகள், நவீன கழிப்பறைகள், ஆடம்பர வரவேற்பறைகள், சமையலறை மற்றும் அனைத்து பக்கங்களையும் பார்ப்பதற்கு ஏற்ற பால்கனி என அனைத்து வசதிகளையும் கொண்ட படகு இல்லங்கள் இப்போது வந்துவிட்டன
கேரள சுற்றுலா துறையின் மூலமாகவும் பல்வேறு படகு இல்லங்கள் உள்ளன. படகு இல்லங்கள் சாதரணம் முதல் நவீனம் வரை உள்ளது.  பயணிகளின் பொருளாதார வசதிகளை பொறுத்தது. இந்த படகு இல்லங்களில் தங்குவதற்கு ஒரு நாளுக்கு 9000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. குறைந்த பட்சம் 7000 ரூபாய் வரையும் செலவாகலாம். மூன்று வேலை உணவும் உங்களுக்கு அதில் வழங்கப்படும்.
ஒருவர் படகு இல்லத்தில் இருக்கும்போது காயல் வாழ்க்கை நிகழ்வுகளை எந்தவிதமான இடையூறும் இல்லாமல் கண்டு மகிழலாம் என்பது இப்பயணத்தின் சிறப்பாகும்
 
இப்போது நாம்  வள்ளத்தில் பயணிப்போம் ;

முதலில் நாம் ஆலப்புழாவிலிருந்து ஒரு படகினை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம்.
கண்களை மூடி அப்படியே அமைதியாக சிறிது நேரம் பயணம் மேற்கொண்டுவிட்டு பின்னர் கேரளாவின் மிகப்பெரிய காயலான வேம்பனார் ஏரியின் அழகில் மனதைப் பறிகொடுத்தபடி மனதை வருடும் காற்றை நுகர்ந்தபடி பிரயாணம் செய்யலாம்.பின்னர் நாம் கேரளாவின் முக்கிய சுற்றுலா தலமான குமரகோம் நோக்கிச் செல்வோம். வேம்பநாடு காயல்வழியாகச் செல்லும்போது காயல் கிராம வாழ்க்கை மற்றும் காயல் செயல்பாட்டுக் காட்சிகள் ஆகியவற்றைக் கண்டு மகிழலாம். இரு ஓரங்களிலும் தென்னந்தோப்புகளும் வயல்வெளிகளும் உள்ள கால்வாய்கள் வழியாக பொழுதுபோக்காக நீர்வழிப் பயணம் செல்லலாம்.
 
குமரகோமை அடைந்ததும் நாம்  இன்னொரு விந்தையான உலகிற்குள் நுழைந்தது போல உணரமுடியும்  . தீவுக்கூட்டம் நிறைந்த இந்த சிறிய காயல் கிராமத்தின் தனக்கென பிரத்தியேக வாழ்க்கை முறையும் மெல்லிய அழகான மனதை வருடும் காட்சிகள் ஒலிகள் மற்றும் நறுமணம் யாவும் நம்மை  அப்படியே கட்டிப்போட்டு விடும்.குமரகோமில் சிறிது தங்கி இளைப்பாறிவிட்டு வைக்கமிற்குச் செல்லலாம்.

வைக்கம்  இது பல மனோரம்மியமான காட்சிகளையும் வாழ்க்கை முறைகளையும் கண்முன் கொண்டு நிறுத்துகிறது . இங்கு  நாம் கேரள மிகமதிப்பான பாரம்பரிய மாதிரி பொருட்களைக் காணலாம். இந்த நகரின் முதன்மை கவர்ச்சி மிக பிரசித்திபெற்ற சிவன் கோவிலாகும்.
இங்குள்ள பச்சை வயல் வெளிகள் நமக்கு  மற்றுமொரு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும்.
வைக்கத்திலிருந்து கேரளாவின் சுவையான உணவை உண்டு தெம்பாகிய பின்னர் நாம்  சைனைஸ் மீன்பிடி வலைகள் மற்றும் வரலாற்று இடங்கள் நிறைந்த ஃபோர்ட் கொச்சிக்கு  செல்லலாம்.

ஃபோர்ட் கொச்சிக்கு விடைகொடுத்து விட்டு நாம் பால்கட்டி தீவை நோக்கி செல்வோமானால்
அதுதான் நாம் இறுதியாக சென்றடையும் சுற்றுலா தளமாகும். பால்கட்டி  தீவிற்குச் செல்லும் வழியில்நாம் முக்கிய இடமான எர்ணாகுளத்தின் அழகிய காட்சியைக் காணலாம். இதன் தொடுவானம், கப்பல்தளம் ஆகியவை பார்க்கத்தக்கவை ஆகும். பால்கட்டிக்குள் சென்றுவிட்டால் திரும்பிவர மனம் வராது. மெல்லிய தென்றல் காற்று மனதை அள்ளும்.
அழகிய சூரிய வெளிச்சம் ஆகியவை நம்மை பிரியவிடாமல் செய்யும்.அந்த இனிய நினைவுகள் நம்மை எல்லா வருடமும் இங்கு வரத்தூண்டும்

ஆலப்புழாவில் ஒருவரின் விருப்பத்திற்கு ஏற்ப படகுகளை எளிதாக பெற்றுக் கொள்ளலாம். சிறிய நாட்டுப் படகுகள், ஆடம்பரப் படகுகள், சிறிய விரைவு படகுகள், பெரிய பயணிகள் மோட்டார் படகுகள் என்று எல்லாவிதமான படகுகளும் இங்கு கிடைக்கும். சிறிய படகுகள் கால்வாய்கள் வழியாக பயணம் மேற்கொள்ள உதவும்.
நீங்கள் பிரயாணம் மேற்கொள்ள தயாராகிவிட்டால் ஆலப்புழாவைச் சுற்றியும் உள்ளேயும் பயணம் செய்ய கால்வாய் வழி பயணம் முறைகளுள் ஒன்றைத் தேர்வு செய்வது இனிய அனுபவமாக இருக்கும்.

கிருஷ்ணர் கோவில் :

லப்புழாவில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அற்புதமான கிருஷ்ணர் கோவில் காண்போரை ஆச்சர்யப்படுத்தும்.
இக்கோவிலின் மகாவிஷ்ணுவின் தசாவதார காட்சிகள் வியப்பூட்டும்  விதத்தில் அமைந்துள்ளது. இங்கு பள்ளிபானா என்ற பெயரில்
மாயமந்திர நிகழ்ச்சி   12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது
இங்குள்ள கோவிலில் பிரசாதமாக பால் பாயசம் வழங்கப்படுகிறது.

காயங்குளம்-கிருஷ்ணாபுரம் அரண்மனை:
18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனை ஆலப்புழாவில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கேரள மன்னர்களின் கட்டட கலைக்கு சிறப்பான உதாரணமாக இது திகழ்கிறது.
இரண்டு அடுக்குகளால் ஆன இந்த அரண்மனையில்  பல்வேறு புராதான பொருட்கள் உள்ளது. அதனை பாதுகாக்கும் விதமாக ஒரு அருங்காட்சியகமும் உருவாக்கப்பட்டுள்ளது. ஓவியங்கள், வெண்கல சிற்பங்கள், சுவரில் வரையப்பட்ட ஓவியங்கள் உள்ளிட்டவை அரண்மனையின் வரலாற்றை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
 
சக்குலத்து பகவதி கோவில் :
மபலப்புழா நீராட்டுபுரத்தில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. பிரம்ஹா, விஷ்ணு, சிவன், ஆகிய முக்கடவுல்களையும் உருவாக்கிய மகா சக்தியாக இந்த பகவதி போற்றப்படுகிறாள்.
இங்கு நடக்கும் பொங்கல் திருவிழா மிகவும் பிரசித்திபெற்றது. இதல் நாடு முழுவதிலுமிருந்து பெண்கள் பங்கேற்று வழிபடுகின்றனர்.
 
எடத்துவா தேவாலயம் :

லப்புழாவில் இருந்து சும்மார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிறிஸ்துவ தேவாலயம் 1810ல் கட்டப்பட்டது. ஐரோப்பாவின் கட்டடக்கலையை பின்பற்றி இந்த தேவாலயம் கட்டப்பட்டது. இங்கு வந்து மனம் ஒன்றி பிரார்த்தனை செய்தால் மனநோய், புத்தி பேதலிப்பு, உள்ளிட்ட நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. இந்தியா முழுவதிலுமிருந்து கிறித்துவ அன்பர்கள் வந்துசெல்லும் புனித தளமாக, சக்திவாய்ந்த இடமாக,
தேவனின் கருணை நிரம்பும் இடமாக இந்த தளம் அமைந்துள்ளது.
 
 
நேரு ஸ்னேக் கோப்பை படகுப் போட்டி
வ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதம் 2-ம் சனியன்று இங்கு பிரசித்திபெற்ற படகுப் போட்டி நடைபெறும்.
பல தினுசுப் படகுகள் அலங்கரிக்கப்பட்டு, அதில் 100 துடுப்பாளர்கள் துடுப்பு போடுவார்கள். இந்தப் படுகுச் சவாரிப் போட்டி, நகரத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய வேம்பாநந்த் ஏரியில் நடைபெறும். இதற்கான நுழைவுச் சீட்டுகள் எல்லா கடைகளிலும் விற்கப்படும்.

ஆலப்புழாவில் எங்கு தங்குவது?
 
1. ஹோட்டல் கய்லோரம்
2. மராரி பீச்
3. கேரளா ஹவுஸ் போட்
4. கேரளீயம் ஆயுர்வேதிக் லேக் ரிசார்ட்
ஆகிய ஹோட்டல்களில் தங்கலாம்.

ஆலப்புழா செல்வது எப்படி :
பிற பகுதியில் இருந்து எளிதாக ரயிலில் வந்து விடலாம். சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் கொச்சி சர்வேதேச விமானநிலையம் அமை
ந்துள்ளது. இதனால் விமானம் மார்கமாக வர விரும்பும் பயணிகளுக்கு ஏதுவான வசதிகள் உள்ளது.
சென்னையிலிருந்து தினமும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் பயணம் செய்ய ஏதுவாக இருக்கும். ஆலப்புழா எக்ஸ்பிரஸ் தினமும் இரவு 8.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் .ஆலப்புழாவில் தம்பதிகள் இருவர் மற்றும் இரண்டு குழந்தைகள் இரண்டுநாட்கள் தங்க சுமார் 15000 வரை ஆகும்.
செலவு குறைக்க விரும்பினால் சாதாரண விடுதிகளை தேர்ந்தெடுக்கலாம். அல்லது ஆலப்புழாவிலிருந்து 15 கிலோமீட்டர் வெளியில் தங்கி அங்குள்ள விடுதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆலப்புழாவை சுற்றிபார்க்க 2 நாட்கள் தேவை. ஆலப்புழாவில் உணவுவகைகள் மிகவும் பிரபலமானவை. குறிப்பாக கரிமீன், மற்றும் சில மீன் வகைகள் நிறைந்த உணவு கிடைக்கும். அது மட்டுமா கேரளாவின் பாரம்பரிய உணவுகள் எங்கும் மணக்கும்.

0 comments:

Post a Comment