Thursday, 5 September 2013

பங்குச் சந்தை - முக்கிய கலைச் சொற்களுக்கான அர்த்தம்!


பங்குச் சந்தை முதலீட்டில் சில முக்கியமான வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து கொண்டால் கம்பெனிகளின் காலாண்டு முடிவுகளை சட்டெனப் புரிந்து கொள்ள உதவும். எனவே, சில முக்கிய கலைச் சொற்களுக்கான அர்த்தம் இதோ உங்களுக்காக...!

முக மதிப்பு (Face Value)

ஒரு பங்கின் முகமதிப்பு என்பது பங்கின் மூலம் பங்கு மூலதனத்துக்குப் போய்ச் சேரும் தொகையைக் குறிப்பதாகும். இந்த மதிப்புக்குதான் டிவிடெண்ட் வழங்கப்படும்.

புத்தக மதிப்பு (Book Value)

கம்பெனியின் மொத்தச் சொத்து மதிப்பிலிருந்து அதன் கடன்களைக் கழித்தால் கிடைக்கும் மதிப்புதான் இது. ஒரு கம்பெனியை விற்றால் என்ன விலை கிடைக்குமோ, அதுதான் அந்த கம்பெனியின் புத்தக மதிப்பு.

செயல்பாட்டு லாப வரம்பு (Operating Profit Margin)

கம்பெனி வழக்கமாகச் செய்யும் செலவுகளான மூலப் பொருட்களின் விலை, பணியாளர்கள் சம்பளம், வரி மற்றும் தேய்மானத்துக்கு முந்தைய செலவு போன்றவற்றை அதன் வருமானத்தால் வகுக்கக் கிடைப்பது இது. வர்த்தகச் செயல்பாடுகளுக்கான செலவை ஒரு கம்பெனி சிறப்பாகக் கையாளுகிறதா என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

மார்க்கெட் கேபிட்டலைசேஷன் (Market Capitalization)

கம்பெனியின் அங்கீகரிக்கப்பட்ட, வெளியிடப்பட்ட மற்றும் முதலீட்டா ளர்களால் வாங்கப்பட்டுள்ள மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு இது. கம்பெனி எந்த அளவுக்கு பெரிது என்பதை இது காட்டும்.

இ.பி.எஸ். (Earning per share)

ஒரு பங்கு சம்பாதிக்கும் தொகையே இது. குறிப்பிட்ட காலத்தில் ஒரு பங்கு மூலம் எவ்வளவு வருமானம் கிடைத்திருக்கிறது என்பதைக் குறிப்பது இது. கம்பெனியின் நிகர லாபத்தை, அதன் மொத்தப் பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்தால் இது கிடைக்கும். இ.பி.எஸ். அதிகமாக இருக்கும் பங்குகளை துணிந்து வாங்கலாம்.

பி/இ விகிதம் (Price to Earnings Ratio)

பங்கின் சந்தை விலைக்கும், அந்தப் பங்கின் இ.பி.எஸ்-க்கும் உள்ள விகிதம்தான் பி/இ விகிதம். இந்த விகிதம் குறைவாக இருக்கும் பங்குகளை வாங்கலாம்.

இண்டஸ்ட்ரி பி/இ விகிதம் (Industry P/E)

ஒரு குறிப்பிட்ட துறையில் இருக்கும் மொத்த நிறுவனங்களின் சராசரி பி/இ விகிதம்தான் இது. இந்த சராசரியுடன் குறிப்பிட்ட நிறுவனத் தின் விகிதத்தை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். சராசரி பி/இ விகிதத்தைவிட கம்பெனியின் விகிதம் குறைவாக இருந்தால், அந்த கம்பெனி பங்கை வாங்கலாம்.

பி/பி.வி (Price to book Value)

பங்கின் விலைக்கும் புத்தக மதிப்புக்கும் உள்ள விகிதம். அதாவது, பங்கின் விலையை, பங்கின் புத்தக மதிப்பால் வகுக்கக் கிடைப்பது. பி.இ விகிதத்தைப் போல இந்த விகிதமும் குறைவாக இருந்தால் நல்லது.

0 comments:

Post a Comment