Sunday, 8 September 2013

செவ்வாய் கிரகத்துக்கு விரைவில் ஆய்வு விண்கலம்: இஸ்ரோ முடிவு!


 space_shuttle_001.w245


செவ்வாய் கிரகத்துக்கு வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆய்வு விண்கலம் அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் கனவுத் திட்டமாகக் கருதப்படும் இந்தத் திட்டத்தை இஸ்ரோ வருகிற 11-ஆம் தேதி அறிவிக்க உள்ளது.


பி.எஸ்.எல்.வி.- சி25 ராக்கெட்டின் உதவியுடன் நிகழாண்டு அக்டோபர் 21 முதல் நவம்பர் 19-ஆம் தேதிக்குள் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.


விண்வெளி போன்ற சூழலில் விண்கலம் சோதிக்கப்பட்டுள்ளது. வெப்ப, வெற்றிடச் சோதனைகளையும் விண்கலம் கடந்துள்ளது. அதேபோல, பி.எஸ்.எல்.வி.- சி25 ராக்கெட்டை பொருத்தும் பணிகள் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் தொடங்கியுள்ளன.


பி.எஸ்.எல்.வி.-சி25 ராக்கெட்டின் வெளிப்புறத் தகடுகளைப் பொருத்தும் முதல் கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், ராக்கெட் ஒருங்கிணைப்புப் பணி அக்டோபர் 10-ஆம் தேதி நிறைவடையும்.


பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து நவம்பரில் விண்ணில் செலுத்தப்படும் விண்கலம், 10 மாதங்கள் விண்வெளியில் பயணம் செய்த பிறகு, செவ்வாய் கிரகத்தை சென்றடையும். பின்னர், அங்கு நீள்வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படும் விண்கலம், அதன் பரப்பில் இருந்து 500 கி.மீ. நெருக்கத்திலும், 80 ஆயிரம் கி.மீ. தொலைவிலும் சுற்றி வரும். 1,350 கிலோ எடை கொண்ட விண்கலத்தில் 5 ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும்.


விண்வெளி அறிவியலுக்கான ஆலோசனைக் குழுவின் (ஆட்காஸ்) பரிந்துரையின்படி, 5 கருவிகளின் மொத்த எடை 15 கிலோவாக இருக்கும். ஆய்வுக் கருவிகள், செவ்வாய் கிரகத்தின் பரப்பு, காற்று மண்டலம், கனிம வளங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடும். மீத்தேன் இருப்பு, பரப்பின் அமைப்பு ஆகியவற்றைச் சோதிப்பதுடன், அவை தொடர்பான தகவல்களை பூமிக்கு அனுப்பி வைப்பதே விண்கலத்தின் முக்கியப் பணியாக அமையும்.


இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இஸ்ரோ வருகிற 11ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளது.


0 comments:

Post a Comment