Thursday, 3 October 2013

லாலுக்கு 5 ஆண்டு சிறை!





 கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. முன்னதாக, சிறையில் உள்ள குற்றவாளிகள் 45 பேரும் வீடியோகான்பரன்ஸ் மூலம் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர். பீகாரில் கடந்த 1990ம் ஆண்டுகளில் கால்நடை தீவனங்கள் வாங்கியதில் ரூ.950 கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.

மாநிலத்தின் பல கருவூலங்களில் இருந்து போலி ரசீதுகள் மூலம் பணம் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக அப்போது பீகாருடன் இணைந்திருந்த ஜார்கண்டில் உள்ள சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் இருந்து, கால்நடை தீவனம் வாங்க போலி ரசீதுகள் மூலம் ரூ.37.7 கோடி பெறப்பட்டது.

இந்த ஊழல் தொடர்பாக முதல்வர்களாக இருந்த லாலு பிரசாத், ஜெகன்னாத் மிஸ்ரா மற்றும் அப்போதைய கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 56 பேர் மீது புகார் கூறப்பட்டது. இந்த ஊழல் தொடர்பாக கடந்த 1996ல் சிபிஐ விசாரணையை தொடங்கியது. அதன்பின் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், 1997ம் ஆண்டு முதல்வர் பதவியை லாலு ராஜினாமா செய்தார்.

இதற்கிடையே வழக்கு விசாரணையின் போது 7 பேர் இறந்தனர். சிலர் அப்ரூவராக மாறினர். ஒருவர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியை மாற்ற கோரி, ஜார்கண்ட் ஐகோர்ட்டிலும் சுப்ரீம் கோர்ட்டிலும் லாலு பிரசாத் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து, ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு கோர்ட்டில் லாலு தரப்பு வக்கீல், தனது தரப்பு வாதத்தை கடந்த 17ம் தேதி முடித்துக் கொண்டார். 17 ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில் நீதிபதி பிரவாஸ் குமார் சிங் கடந்த திங்கட்கிழமை தீர்ப்பளித்தார். முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத், ஜெகன்னாத் மிஸ்ரா, 6 அரசியல்வாதிகள் (ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஜகதீஷ் சர்மா உள்பட), 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 45 பேரும் குற்றவாளிகள் என்றும் இவர்களுக்கான தண்டனை விவரம் 3ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி அறிவித்தார். இதனையடுத்து, சிறையில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங்கில் சிபிஐ நீதிமன்ற நீதிபதி பி.கே.சிங் வீடியோ முன்பாக அவர்கள் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

எம்.பி. பதவியை இழக்கிறார் லாலு

மாட்டு தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள லாலுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கிரிமினல் வழக்கில் சிறை தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக பதவி இழந்து விடுவார்கள் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை 10ம் தேதி ஒரு வழக்கில் தீர்ப்பளித்தது. இதை செல்லாததாக்க அவசர சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. ஆனால், ராகுல் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த அவசரச் சட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனால், தண்டனை அறிவிக்கப்பட்ட லாலுவிற்கும் மற்றும் ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த ஜகதீஷ் சர்மாவின் எம்.பி. பதவி பறிபோய் விடும்.

0 comments:

Post a Comment