Friday, 25 October 2013

திண்டுக்கல் மாவட்டத்தின் வரலாறு !


திண்டுக்கல் என்றதும் பூட்டு ஞாபகத்திற்கு வரும். ஆனால் இந்நகருக்கு பன்முகங்கள் இருக்கின்றன. திண்டுக்கல் வரலாற்றின் திசைகள் செல்லும் கோட்டை தலையணை திண்டுபோல் இருப்பதால் இந்நகருக்கு திண்டுக்கல் எனப் பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு முன் இருந்த பெயர் திண்டீஸ்வரம். இது புராணப் பெயர். திண்டி என்ற மன்னன் இந்நகரை ஆண்டபோது, மக்களை துன்புறுத்தினார். மக்கள் ஈசனை வேண்டி தவம் புரிந்தனர். திண்டி மன்னனை சிவனாகிய, ஈஸ்வரன் அழித்ததால் இந்த ஊர் திண்டீஸ்வரம் என்று அழைக்கப்பட்டது.

மேலும் வெங்காயம், நிலக்கடலையின் மொத்தச் சந்தையாகத் இவ்வூர் திகழ்கிறது. இங்கிருந்து பிரியும் சாலைகள் கோவை, ஈரோடு, சேலம், திருச்சி, கரூர், மதுரை, சிவகங்கை மாவட்டங்களோடு இணைகின்றன. தமிழகத்தின் முக்கிய கோடை வாழிடமான மலைகளின் இளவரசியான கோடைக்கானல் இந்த மாவட்டத்தில்தான் உள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் 2133 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பேரணை, சிறுமலை ஆகிய இரு சிறந்த உல்லாச ஓய்விடங்களும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளன.

திண்டுக்கல் வரலாறு

திண்டுக்கல் தொன்று தொட்டு பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது. குறிப்பாக விஜய நகர ஆட்சியில்தான் ஏற்றம் பெற்றது. வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த இராணுவத்தளமாக முன்னேறியது. நாயக்க மன்னர்கள், ஆர்க்காட்டு நவாபுகள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது. இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம். பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல்.திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் முக்கியமான படை தளங்களில் ஒன்று .

மலைக்கோட்டை கோவில்

திண்டுக்கல் மலையில் கி.பி.13ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட மன்னன் முதலாம் சடைவர்மன் குலசேகர பாண்டியன் இக்கோவிலை கட்டினார். அன்று முதல் இக்கோவில் ராஜராஜேஸ்வரி கோவில் என்றழைக்கப்பட்டது. தற்போது இந்த மலைக்கோவிலில் ஐந்து கடவுள்களுக்கான கருவறைகள் தனித்தனியாக இருந்த போதிலும் எந்தக் கருவறையிலும் சிலைகள் இல்லை. எனவே இந்தக் கோவிலில் வழிபாடும் இல்லை. இந்தமலைக்கோட்டை முழுவதும் இந்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இருப்பினும் இங்குள்ள கருவறை ஒன்றிலிருந்த சிவலிங்கத்தின் லிங்கமில்லாத ஆவடைப்பகுதி கருவறைக்கு வெளியே தனியே கிடக்கிறது.

0 comments:

Post a Comment