Monday, 7 October 2013

ஜனவரியில் விண்வெளிக்கு திகில் பயணம்!


ஒயிட்நைட் விமானம். அதன் நடுவில் இருப்பது ஸ்பேஸ்ஷிப் டூ.

அமெரிக்காவின் வர்ஜின் கேலக்டிக் நிறுவனம் அனேகமாக ஜனவரியில் விண்வெளி சுற்றுலாவை ஜாம்ஜாம் என்று நடத்திவிடும் என்று தெரிகிறது. 600-க்கும் அதிகமானவர்கள் 150 லட்சம் ரூபாய் கட்டிவிட்டு ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். 


இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன். உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவர். இவருக்கு சொந்தமான வர்ஜின் குழுமம் பல பெயர்களில் உலகின் பல பகுதிகளிலும் விமான சேவைகள் நடத்தி வருகிறது. “ஊர்விட்டு ஊர், நாடுவிட்டு நாடு விமானம் இயக்குவதில் என்ன பெருமை இருக்கிறது? விண்வெளிக்கு விமானம் இயக்கலாம் வாருங்கள்” என்ற அறிவிப்புடன் கடந்த 2004ம் ஆண்டில் புதிதாக வர்ஜின் கேலக்டிக் என்ற நிறுவனத்தைத் தொடங்கியது வர்ஜின் குழுமம். துவங்கியதிலிருந்தே, விண்வெளிச் சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடந்தன. பல்வேறு கட்டமாக சோதனை ஓட்டங்களும் நடந்து வருகின்றன. 



கிறிஸ்துமஸில் கிளம்பிவிடலாம் என்று திட்டமிட்டிருந்தார்கள். அதை சற்று ஒத்திவைத்திருக்கின்றனர். அனேகமாக 2014 ஜனவரியில் கிளம்பிவிடுவார்கள் போலத் தெரிகிறது. 2011ம் ஆண்டு நிலவரப்படி 400 பேர் வரை முன்பதிவு செய்திருந்தார்கள். நாள் நெருங்க நெருங்க.. வரிசை 600ஐத் தாண்டியிருக்கிறது. டிக்கெட் கட்டணம் இரண்டரை லட்சம் டாலர். அதாவது, 150 லட்சம் ரூபாய். முதல் ஆயிரம் பேருக்குதான் இந்த கட்டணம். அடுத்த பேட்ச்சுக்கு இன்னும் அதிகமாகிவிடுமாம். 



வர்ஜின் கேலக்ட்டிக் திட்டப்படி, இந்த விண்வெளி சுற்றுலா என்பது இரண்டுகட்டப் பயணம். இரண்டு பேர் கைகோர்த்து நிற்பதுபோலக் காணப்படும் விமானம் ‘ஒயிட் நைட் டூ’ எனப்படுகிறது. விண்வெளியில் பறப்பது இது அல்ல. அது ‘ஸ்பேஸ்ஷிப் டூ’ எனப்படும் இன்னொரு குட்டி விமானம். அப்பா-அம்மாவின் தோள் பிடித்துத் தொங்கும் குழந்தைபோல, ஒயிட் நைட்டின் கீழ்ப் பகுதியில் ஸ்பேஸ்ஷிப் டூ பொருத்தப்பட்டிருக்கும். 


விண்வெளி சுற்றுலா போகும் பயணிகள், ஸ்பேஸ்ஷிப்பில்தான் இருப்பார்கள். பயணிகளோடு ஸ்பேஸ்ஷிப்பையும் சுமந்துகொண்டு, ஒயிட்நைட் பறக்கத் தொடங்கும். சுமார் 52 ஆயிரம் அடி உயரத்துக்குப் போனதும், ஒயிட்நைட் நிதானமாக பறந்துகொண்டிருக்க.. அதுவரை அப்பா-அம்மாவின் தோளில் தொங்கும் குழந்தையாக சமத்தாக வந்த ஸ்பேஸ்ஷிப் டூ தனது இன்ஜினை இயக்க ஆரம்பித்து, கணப்பொழுதில் ஒயிட்நைட்டில் இருந்து விடுபட்டு அசுர வேகத்தில் பறக்கத் தொடங்கும். 


பூமியிலிருந்து 100 கி.மீ.க்கு அப்பால் உள்ள பகுதியைத்தான் விண்வெளி (ஸ்பேஸ்) என்கிறார்கள். (சர்வதேச விண்வெளி நிலையம் சுற்றுவது சுமார் 150 கி.மீ. உயரத்தில்) அந்த உயரம் வரை சென்று விண்வெளியை சுற்றிக்காட்டிவிட்டு, ஸ்பேஸ்ஷிப் பூமிக்கு திரும்பிவிடும். உயரே கிளம்புவதற்கு மட்டுமே ஒயிட்நைட்டின் உதவி தேவை என்பது குறிப்பிடத்தக்கது. 


எல்லாம் சேர்த்து மொத்தம் இரண்டரை மணி நேரப் பயணம். அதில் விண்வெளியைத் தொடும் திக் திக் திகில் நேரம் 6 நிமிடங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எடையில்லாத் தன்மையை பயணிகள் அப்போது மட்டும் உணர்வார்கள். இருக்கையில் இருந்து ஜிவ்வென்று எழும்பி, கேபினுக்குள்ளேயே மிதப்பார்கள். 


ஸ்பேஸ்ஷிப் டூ குட்டி விமானம் என்பதால் அதில் 6 பேர் மட்டுமே பயணிக்க முடியும். 


அமெரிக்காவைச் சேர்ந்த என்பிசி டிவி ‘ஸ்பேஸ் ரேஸ்’ என்ற பெயரில் ரியாலிட்டி ஷோ நடத்த இருக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்கள் பைசா செலவில்லாமல் விண்வெளி சுற்றுலா போய்வரலாம். 


இங்கிலாந்து ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாக்கிங், அமெரிக்கப் பாடகி கேதி பெரி, பிராட் பிட் - ஏஞ்சலினா ஜூலி என்று பல பிரபலங்களும் விண்வெளி பயணத்துக்கு முன்பதிவு செய்துவைத்திருக்கிறார்கள். 

0 comments:

Post a Comment