Saturday, 30 November 2013

சந்திரனுக்கு ஆளில்லா விண்கலம்: நாளை அனுப்புகிறது சீனா!

 

சீனா முதல் முறையாக சந்திரனுக்கு ஆளில்லா விண்கலத்தை நாளை அனுப்புகிறது. இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் உலகில் தனித்துவமான இடத்தைப் பெற வேண்டும் என்ற சீனாவின் லட்சியத் திட்டம் நிறைவேறுகிறது.

சாங் இ-3 (கியான் வைபிங் -3) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலம், ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக விண்கல ஏவுதளத் தலைமை அலுவலகக் குழுவினர் தெரிவித்தனர்.

சீனா இதற்கு முன்பு சந்திரனுக்கு அனுப்பிய 2 விண்கலங்களும் சந்திரனின் சுற்றுப் பாதையில் சுற்றி வருகின்றன. தற்போது சந்திரனின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்வதற்காக ஆளில்லா விண்கலத்தை சீனா முதல் முறையாக அனுப்புகிறது.

விண்கலத்தை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், ஏவுதளமும் அதற்கேற்ப நல்ல நிலையில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்ததாக ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாங் இ-3 விண்கலம் "யுது' என்று அழைக்கப்படும் சந்திரனை ஆராய்ச்சி செய்யும் கருவியையும், அதை தரையில் நிலைநிறுத்தக் கூடிய கருவியையும் தாங்கிச் செல்கிறது. ("யுது' என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சீன மக்களால் சந்திரக் கடவுளாக வணங்கப்பட்டு வரும் வெள்ளை முயலைக் குறிப்பதாகும்.)

சந்திரனில் உள்ள இயற்கை வளங்கள், மேற்பரப்பில் உள்ள பொருள்கள், புவியியல் அமைப்பு போன்றவற்றை "யுது' ஆய்வு செய்யும்.

விண்வெளி மையத்தில் ரஷியா அமைத்துள்ள மீர் விண்வெளி நிலையத்தைப்போல, ஒரு நிரந்தரமான விண்வெளி நிலையத்தை தானும் அமைக்க வேண்டும் என்பதுதான் சீனா தொடர்ந்து விண்கலங்களை சந்திரனுக்கு செலுத்தி வருவதின் பின்னணியாகும்.

சந்திரனையும் தாண்டி, செவ்வாய், புதன் போன்ற கிரகங்கள் தொடர்பான நீண்ட ஆராய்ச்சியில் ஈடுபடவும் எங்களது விஞ்ஞானிகள் தயாராக உள்ளனர். அதற்கான அனுமதி கிடைத்தவுடன் செயல்படத் தொடங்குவோம் என்று சாங் இ-3 விண்கலத்தின் தலைமை விஞ்ஞானி யே பெய்ஜியான் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment