Saturday, 9 November 2013

காமன்வெல்த் மாநாடு : சல்மான் குர்ஷித் பங்கேற்பு


இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்றும், இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்ளப் போவதாகவும் வெளியுறவுத் துறை  அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழீழ இனப் படுகொலைக்கு காரணமாக இருந்த ராஜபட்சவை காப்பாற்றுவதற்காக இலங்கையில் நடத்தப்படும் இந்தக் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்கக் கூடாது என்றும், காமன்வெல்த் மாநாட்டில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்றும் தமிழகத்தின் சார்பில் அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வாளர்களும் வலியுறுத்தி வரும் நிலையில், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆனால், இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், யாழ்ப்பாணத்துக்கு இந்தியக் குழுவை வழி நடத்திச் செல்வது குறித்தும் அமைச்சகத்திடம் இருந்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

முன்னதாக, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது, இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்கு தமிழகத்தில் எழுந்துள்ள உணர்ச்சிபூர்வ போராட்டங்களை எடுத்துச் சொல்லி, இதனைத் தவிர்க்குமாறு தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள் வற்புறுத்தினர். தேர்தல் வருவதை ஒட்டி, தமிழகத்தில் கூட்டணி அமைப்பதில் எந்தவித பிரச்னையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று கூறினர். 
 
ஆனால், வெளியுறவு அமைச்சகம், இந்தியா, இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்றால், அது, சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இன்னும் அதிக இடம் அளித்ததாகிவிடும், இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கக் காரணம் ஆகிவிடும், எனவே அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இந்த மாநாட்டில் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது.

0 comments:

Post a Comment