Saturday, 23 November 2013

இன்னும் எளிதாகுமா பத்திரப் பதிவு?

 

முத்திரைத் தீர்வை விற்பனையில் ஆந்திரா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. ஆந்திராவில் வில்லங்கச் சான்றிதழ்கள் வழங்கும் முறையை 1980 ஆம் ஆண்டு முதல் கம்ப்யூட்டர் மயமாக்கிவிட்டார்கள். அத்துடன் 1983ஆம் ஆண்டில் பதிவுத்துறை கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டுச் சொத்து தொடர்பான எல்லா விவரங்களும் கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்டுவிட்டது. அதைப் போலவே பொதுவான பவர் ஆஃ அட்டர்னி நிலைமையைத் தெரிந்துகொள்ளவும் பதிவுத்துறை இணையதளம் உதவுகிறது. இப்படிப் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளதால், இந்திய அளவில் ஆந்திரப் பத்திரப் பதிவுத்துறை முன்னணியில் உள்ளது.

முத்திரைத் தீர்வை விற்பனையில் இரண்டாமிடத்தில் தமிழகம் இருந்தாலும், ஆந்திராவுடன் ஒப்பிடும்போது பத்திரப்பதிவு இன்னும் எளிமைப்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் வருவாய்த் துறையும், பத்திரப் பதிவுத் துறையும் இணைந்து செயல்படும்பட்சத்தில் சொத்துப்பதிவு மற்றும் நகர்ப்புற வீட்டு மேம்பாட்டு துறையில் தமிழகம் இந்தியாவுக்கு முன்மாதிரியாகத் திகழமுடியும். அதற்குச் சில நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

செய்ய வேண்டிய மேம்பாடுகள் 


#தமிழகத்தில் தற்போது சொத்தை விற்பனை செய்யப் பத்திரப்பதிவுத் துறைக்கு வரும் போது பட்டாவைக் கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் கோவை உள்பட 9 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. அதைத் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்துவது அவசியம்.

#  குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் சொத்துப் பத்திரத்துடன் சொத்துகளின் (வீடு, நிலம்) புகைப்படங்களையும் இணைப்பது நடைமுறையில் உள்ளது. இப்படிச் செய்வதன் மூலம் சொத்தை இன்னொருவர் அபகரிப்பது போன்ற குற்றங்களைத் தடுக்க முடியும். இந்த முறையைத் தமிழகத்திலும் அறிமுகப்படுத்தலாம்.

#  பத்திரப் பதிவின்போது சாட்சிக் கையெழுத்துப் போடுபவர்களின் புகைப்படங்களையும் அனைத்து ஆவணங்களிலும் ஒட்டலாம்.

#  பல மாநிலங்களில் முத்திரைத் தீர்வை விற்பவர் மற்றும் வாங்குபவர் இரு தரப்பினரின் டிஜிட்டல் கையெழுத்துகளும் டிஜிட்டல் புகைப்படங்களும் கேட்கப்படுகின்றன. இந்த முறையைத் தமிழ்நாடு முழுவதும் அறிமுகப்படுத்தலாம்.

#  நவம்பர் 2010ஆம் ஆண்டுக்கு முன்பு பவர் ஆஃப் அட்டர்னி விவரங்களைக் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட வில்லங்கச் சான்றிதழில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம்.

#  வில்லங்கம் இருக்கிறதா என்பதை இணையதளம் மூலமாக பார்ப்பதற்கும் ஜெனரல் பவர் ஆஃப் அட்டர்னியைப் பார்ப்பதற்கும் ஆந்திராவில் வசதி உள்ளது. இதைத் தமிழகத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும்.

#  இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்குப் புதுச்சேரியில் ஒரு சொத்தின் முந்தைய தாய்ப் பத்திரங்களைப் படிப்படியாக மூலப் பத்திரம்வரை பதிவு எண்கள் வாயிலாகப் பார்ப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அந்த முறையைத் தமிழகத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும்.

#  மாற்றுத் திறனாளிகளுக்கு முத்திரைத் தீர்வைச் செலவில் குறிப்பிட்ட தள்ளுபடி தர வேண்டும். ராஜஸ்தானில் முத்திரைத் தீர்வையில் உடலில் 40 சதவீதத்திற்கு மேல் ஊனம் உள்ளவர்களுக்கு 1 சதவீதம் தள்ளுபடி தரப்படுகிறது.

0 comments:

Post a Comment