Monday, 2 December 2013

ஹென்றி ஃபோர்ட் (கார் ஜாம்பவானின் கதை) - வரலாற்று நாயகர்!


எந்த ஒரு நாட்டின் அல்லது நகரத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வர்த்தக விருத்திக்கும் மிக முக்கியமான தேவை நல்ல போக்குவரத்து முறை. நம்மை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தரை வழியாக கொண்டு செல்ல இப்போது பல வகையான பொது போக்குவரவு வழிகள் உண்டு. தனிநபர் போக்குவரத்துக்கான வாகனங்களுள் முக்கியமான ஒன்று கார். அதனை பெருமளவில் பிரபலபடுத்தி கற்காலம், பொற்காலம், என்பதுபோல் உலகுக்கு கார் காலத்தை அறிமுகம் செய்த ஒரு கார் ஜாம்பவானைத்தான் நாம் தெரிந்துகொள்ள இருக்கிறோம். அவர்தான் அமெரிக்காவில் கார் உற்பத்தியில் மிகப்பெரிய உந்துசக்தியாக விளங்கி தனது பெயரிலயே உன்னதமான கார்களை உலகுக்குத் தந்த தொழில் பிரம்மா ஹென்றி ஃபோர்ட்.

1863 ஆம் ஆண்டு ஜூலை 30ந்தேதி அமெரிக்காவில் மிச்சிகன் மாநிலத்தில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார் ஹென்றி ஃபோர்ட். ஆறு பிள்ளைகளில் அவரே மூத்தவர். ஃபோர்ட் குடும்பத்திற்கு பெரிய பண்ணை ஒன்று இருந்தது. மற்ற 19ஆம் நூற்றாண்டு சிறுவர்களைப்போல ஃபோர்டும் தனது இளமைக்காலத்தில் அவரது பண்ணையில் பல்வேறு வேலைகளைச் செய்தார். ஆனால் அவருக்கு பண்ணை வேலை சலிப்பைத் தந்தது. நகரும் பாகங்களைக் கொண்ட பொருட்களின்மேல் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. சிறு வயதிலேயே கடிகாரங்களை பழுது பார்க்க கற்றுக்கொண்டார். ஒருமுறை பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தபோது நீராவியால் இயங்கிய ஒரு ட்ராக்டர் வாகனம் மெதுவாக ஊர்ந்து செல்வதை கவனித்தார். அந்தக் கணம்தான் போக்குவரவு வரலாற்றை மாற்றப்போகும் கணமாக அமைந்தது. ஏனெனில் அப்போதே ஃபோர்டின் மனதில் பயணிகள் வாகனம் உதித்தது.

16 வயதானபோது ஃபோர்ட் குடும்பத்தை விட்டு டெட்ராய்ட் நகரில் ஒரு கனரக தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். மூன்று ஆண்டுகள் பயிற்சிபெற்ற பிறகு மீண்டும் மிச்சிகன் திரும்பினார். அந்தக் காலத்தில் புழக்கத்தில் இருந்த நீராவி இயந்திரங்களின்மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்படவே அந்த இயந்திரங்களை இயக்குவதிலும், அதனை கழற்றி பழுது பார்ப்பதிலும் நேரம் செலவிட்டார். அதேநேரம் பண்ணைகளில் பயன்படுத்தக்கூடிய எரிவாயுவில் இயங்கும் பல்வேறு இயந்திரங்களை உருவாக்கினார். ஃபோர்ட்க்கு 30 வயதானபோது சிக்காக்கோவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் பெட்ரோலில் இயங்கிய தண்ணீர் பம்ப் ஒன்றைக் கண்டார். அதை ஏன் ஒரு வண்டியில் பொருத்திப் பார்க்கக்கூடாது என்று சிந்தித்தார். அதே ஆண்டு தாமஸ் ஆல்வா எடிசனின் நிறுவனத்தில் நூறு டாலர் சம்பளத்திற்கு தலமைப் பொறியாளராக வேலைக்குச் சேர்ந்தார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் பெட்ரோலில் இயங்கும் ஒரு காரை உருவாக்க அயராது உழைத்தார் ஃபோர்ட். 1896 ஆம் ஆண்டு மே மாதம் பல்வேறு உதிரிப் பாகங்களையும், பழைய உலோகங்களையும் கொண்டு தன் வீட்டின் பின்புறம் இருந்த ஒரு செங்கல் கூடாரத்தில் தனது வாகனத்தை வடிவமைத்தார். மணிக்கு 10 மைல், மணிக்கு 20 மைல் என்று இரண்டு வேகங்களைத் தரக்கூடிய இருவேறு வார்பட்டைகளை வடிவமைத்துப் பொருத்தினார். ஆனால் அந்த வாகனத்திற்குப் பிரேக் கிடையாது. அதனைப் பின்னோக்கியும் செலுத்த முடியாது. அதற்கு 'Quadricycle' என்று பெயரிட்டார். பார்ப்பதற்கு சைக்கிள்போன்று இருக்கும் ஆனால் நான்கு சக்கரங்களும் ஓர் இருக்கையும் கொண்டிருக்கும். ஆர்வமாக அதை ஓட்டிப்பார்க்கலாம் என்று முற்பட்டபோதுதான் கூடாரத்தின் கதவு சிறியதாக இருந்ததை ஃபோர்ட் அப்போதுதான் உணர்ந்தார்.

தன் கண்டுபிடிப்பை உடனே சோதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு கோடரியை எடுத்து செங்கல் சுவற்றை இடித்துவிட்டு அந்த வாகனத்தை வெளியே கொண்டு வந்தார். அவரது வாகனம் சாலையில் வலம் வந்தது. ஃபோர்ட் அகமகிழ்ந்து போனார். தொழிலியல் உலகில் அது மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. 1903 ஆம் ஆண்டு அவர் மிச்சிகனில் ‘Ford Motor Company’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அமெரிக்க பரந்து விரிந்து கிடப்பதால் ஒரு காலத்தில் கார்களின் தேவை நிச்சயம் அதிகரிக்கும் என்று நம்பிய ஃபோர்ட் கடுமையாக உழைத்து 1908 ஆம் ஆண்டு Model T என்ற காரை உருவாக்கினார். செல்வந்தர்கள் மட்டுமல்ல. சாமானியர்களும்கூட காரை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் ஃபோர்டின் அடிப்படை விருப்பமாக இருந்தது. அதனால் காரின் விலையை மிகக் குறைவாக வைத்திருக்க தயாரிப்புச் செலவுகளை கவனமாக பார்த்துக்கொண்டார். அப்போது அந்தக் காரின் விலை என்னத் தெரியுமா? வெறும் 500 டாலர்தான்.

தற்போதைய நவீன கார்களின் முன்னோடியான அந்த Model T வாகனம் ஆயிரக் கணக்கில் விற்பனையாகத் தொடங்கியது. பதினெட்டே ஆண்டுகளில் 15 மில்லியன் கார்களை விற்றது ஃபோர்ட் நிறுவனம். ஃபோர்டின் தொலைநோக்கு மிக்க தலமையின் கீழ் அந்த நிறுவனம் அபரிதமான வளர்ச்சிகண்டு உலகின் மிகப்பெரிய செல்வம் கொழிக்கும் தொழிலபதிராக அவரை உயர்த்தியது. ஃபோர்ட் புரட்சிகரமான இன்னொரு காரியத்தையும் செய்தார். ஊழியர்களின் நலனை பெரிதாக மதித்ததால் அவர் சம்பளங்களைக் கூட்டி வேலை நேரத்தைக் குறைத்தார். அப்போது 9 மணிநேரம் வேலை, இரண்டு டாலர் 34 காசு சம்பளம். ஃபோர்ட் என்ன செய்தார் தெரியுமா? இருந்த சம்பளத்தை இரட்டிப்பாக்கி ஒருநாளைக்கு குறைந்தபட்சம் சம்பளம் 5 டாலர் என்று அறிவித்தார். மேலும் வேலை நேரத்தை 1 மணிநேரம் குறைத்து 8 மணிநேர வேலையாக்கினார்.

பல பொருளியல் நிபுனர்கள் அவரது அந்த நடவடிக்கையை எள்ளி நகையாடினர். ஆனால் ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருந்ததால் உற்பத்தித் திறன் பெருகி நிறுவனம் அபரித வளர்ச்சி கண்டது. வாழ்வில் செல்வம் கொழித்த அளவுக்கு அவரது மனதில் கருனையும் ஊற்றெடுத்தது. 'டிசன் இன்ஸ்டட்டியூட்’ என்ற அமைப்பை உருவாக்கி பல்வேறு சமூகநல பணிகளுக்காக தன் சொத்தில் பெரும்பங்கை செலவழித்தார் அந்த தொழில் மேதை. போரை அறவே வெறுத்த அவர் முதலாம் உலக்போரை முடிவுக்கு கொண்டுவர விரும்பி ஐரோப்பாவுக்கு பயணமும் மேற்கொண்டார். 1936 ஆம் ஆண்டு தனது மகன் எட்சல் ஃபோர்டின் தலமையில் 'ஃபோர்ட் பவுண்டேஷன்’ என்ற உன்னத அறநிறுவனத்தை தோற்றுவித்தார் ஹென்றி ஃபோர்ட். அந்த அறநிறுவனம் உலகம் போற்றும் பல உன்னத அறப்பணிகளை மேற்கொண்டது.

1943 ஆம் ஆண்டு எதிர்பார விதமாக மகன் எட்சல் இறந்து போனதால் தானே ஃபோர்ட் நிறுவனத்தின் தலமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் ஹென்றி ஃபோர்ட். 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் 7ந்தேதி ஃபோர்ட் தனது 84 வயதில் காலமானபோது 'ஃபோர்ட் பவுண்டேஷன்’ எனப்படும் உலகின் மிகப்பெரிய அற நிறுவனத்தை விட்டுச் சென்றார். வாழ்வில் செல்வம் சேரும்போது சுயநலமும் சேர்ந்துகொள்வதை பலமுறை சந்தித்திருக்கிறது வரலாறு. ஆனால் போக்குவரவு துறையில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்து செல்வந்தரான ஃபோர்ட் மிகப்பெரிய சமூக கடப்பாட்டைக் காட்டினார். சமூக நலத்திற்காக தன் சொத்தை வாரி வழங்கினார்.

1 comments: