Wednesday, 18 December 2013

‘அச்சம் தவிர்’ விறுவிறுப்பு...சினிமா விமர்சனம்..!,




நடிகர் : சரத்குமார்

நடிகை : சனுஷா

இயக்குனர் : ஓம்கர்

இசை : ஜோஸ்வா ஸ்ரீதர்

ஓளிப்பதிவு : விஸ்வாஸ் சுந்தர்



நிவாஸ், ஜீவா, யாசர் ஆகிய மூன்று பேரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். இவர்களின் நட்பு கல்லூரி வரை தொடர்கிறது. படிப்பு மற்றும் தொழில் முறையில் இவர்களின் ஈடுபாடு வெவ்வேறாக இருந்தாலும் எண்ண ஓட்டம் ஒரே மாதிரியாகதான் இருக்கும்.

முதலில் ஒரு போலீஸ் ஸ்டேசனில் இருந்து ஒரு ரவுடியை காப்பாற்றுகிறார்கள். பிறகு அவன் மூலம் துப்பாக்கி வாங்குகிறார்கள். மூன்று நண்பர்களில் ஒருவரான யாசருக்கு கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். யாசரின் நண்பர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன். இவர் மேட்ச் பிக்சிங் மூலம் போலீசிடம் மாட்டிக்கொள்கிறார். இவர் ரிலீஸ் ஆவதற்கு யாசர் போராட்டம், மறியல் செய்து வெளியே கொண்டு வருகிறார். வெளியில் வரும் அவர் யாசரை சந்திக்க செல்கிறார். இருவரும் சந்தித்த அடுத்த சமயத்தில் யாசர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். கிரிக்கெட் வீரரை யாரோ கடத்தி சென்று விடுகிறார்கள்.

ஜீவா சினிமாவில் ஈடுபாடு உள்ளவர். சினிமா ஸ்டார் பெரிய தம்பியிடம் ஜீவாவின் தந்தை ரசிகனாகவும், அவருடைய படத்திற்கு கட் அவுட், பேனர் வைப்பது போன்ற வேலைகளையும் செய்து வந்தவர். இதேபோல் பெரிய தம்பியின் மகன் சின்ன தம்பியும் சினிமாவில் நடிக்கிறார். அவருடைய படத்தின் வெற்றி விழாவில் பெரிய தம்பி கடத்தப்படுகிறார். இந்த களேபரத்திற்கு மத்தியில் ஜீவா கொல்லப்பட்டு கிடக்கிறார். இந்த இரண்டு சம்பவங்களை துப்புதுலக்கும் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் வருகிறார்.

நிவாஸ் அரசியலில் ஈடுபாடு உடையவர். ஒரு விழாவில் எம்.எல்.ஏ.வை கொல்ல முயற்சிக்கிறார் நிவாஸ். அப்போது போலீஸ் அதிகாரியான சரத்குமார் எம்.எல்.ஏ.வை காப்பாற்றி நிவாசை கைது செய்கிறார்.

இவர் எதற்காக எம்.எல்.ஏ.வை கொலை செய்ய வந்தார்? கடத்தப்பட்ட கிரிக்கெட் வீரர், சினிமா நடிகர் கதி என்ன? எதற்காக கடத்தப்பட்டார்கள்? நண்பர்கள் எப்படி இறந்தார்கள்? என்ற மீதிக்கதையை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்புடனும் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தில் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் ஹவிஸ், இன்னும் நடிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நண்பர்களாக ஜீவா, யாசர் கதாபாத்திரத்தில் வருபவர்கள் திறமையாக நடித்திருக்கிறார்கள்.

நாயகியான சனுஷா, நடிப்பில் அழகு. மற்றொரு நாயகியான அபிநயாவிற்கு நடிக்க வாய்ப்பு குறைவு. சுமன், ஆசிஷ் வித்யார்தி, கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஆகியோர், அவர்களுக்கு கொடுத்த வாய்ப்பை திறம்பட செய்திருக்கிறார்கள். போலீசாக வரும் சரத்குமார் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருந்துகிறார்.

படத்தில் பாடல்கள் அடிக்கடி வருவதால் படத்தின் விறுவிறுப்பு குறைகிறது. ஆனால் பாடல் காட்சிகளை ஒளிப்பதிவு செய்த விதம் அருமை. பின்னணி இசையிலும் ஸ்கோர் பண்ணுகிறார் ஜோஸ்வா ஸ்ரீதர். இளைஞர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதையை சிறப்பாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர் ஓம்கர்.

மொத்தத்தில் ‘அச்சம் தவிர்’ விறுவிறுப்பு.

0 comments:

Post a Comment