Thursday, 5 December 2013

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் கடவுள்!

* காற்றை நீங்கள் கண்ணால் காண முடியவில்லை என்பதால் காற்றே இல்லை என்று சொல்லிவிட முடியுமா? இறைவனை நேரில் காண முடியாவிட்டால் இறைவனே இல்லை என்றாகிவிடுமா?


* சூரிய ஒளியின் சக்தியை ஒரு பூதக்கண்ணாடி வழியே ஒளிக்கிரணத்தை செலுத்துவதன் மூலம் அறியலாம். மனதை ஒருமுகப்படுத்தினால் தியானத்தில் இறைவனின் ஆற்றல் வெளிப்படும்.


* உங்களுடைய ஆத்மாவைக் காண விரும்பினால் வெளியே தேடக்கூடாது. உள்ளேதான் பார்வையைத் திருப்ப வேண்டும். இறைவனைத் தேடி எத்தனை தூரம் போவீர்கள், அவன் உங்களுக்குள் ஒளிவிடுவதைக் கண்டு கொள்ளாமல்.


* மூன்றாவது மாடியிலுள்ள அலுவலகத்தை அடைவது உங்கள் நோக்கம். அதற்கு லிப்டை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறீர்கள்.


அதுபோல, அரூபமான இறைவனை அடைய உருவங்களையும், பெயரில்லாதவனை அடைய பெயர்களையும் பயன்படுத்துகிறோம்.


* ஒருவர் சரசரவென்று நேரடியாக மரத்தில் ஏறி மாங்காய் பறித்து விடுகிறார். இன்னொருவருக்கு துறட்டு தேவைப்படுகிறது. வேறொருவருக்கு ஏணி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று, ஞானிகள் இறைவனுடன் நேரடித் தொடர்புடையவர்கள்; நாமோ இறைவனை படிப்படியாய் முயன்று அடைகிறவர்கள். அவரவர் பக்குவத்துக்கேற்ப சாதனம் தேவைப்படும்.


* நம் உறவினரின் புகைப்படத்தைப் பார்க்கும் போது, அவரையே நேரில் பார்ப்பது போல் இருக்கிறது. ”படத்தை ரொம்ப அருமையா எடுத்திருக்கிறார் போட்டோகிராபர்,” என்போம். அதற்குமேல் போட்டோகிராபரோ, கேமரா நுணுக்கமோ நம் நினைவுக்கு வராது. அதுபோல் தான் இறைவனின் நற்குணங்கள் தெரியும். அவனை ஆராய வேண்டுமென்றால் முடியாது.

0 comments:

Post a Comment