Friday, 3 January 2014

செவ்வாய்க் கிரக ஒரு வழிப் பயணத்திற்கு 62 இந்தியர்கள் தேர்வு!




நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லாப நோக்கின்றி செயல்படும் மார்ஸ் ஒன் என்ற நிறுவனம் செவ்வாய்க் கிரகத்தில் நிரந்தரமான மனிதக் குடியிருப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதையடுத்து அங்கு குடியேற 62 பேர் இந்தியாவிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 செவ்வாய்க் கிரகத்தில் குடியேற விருப்பமுள்ள ஆர்வலர்களுக்கான விண்ணப்பங்களை அந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதற்கு பதில் அளித்து 140 நாடுகளில் இருந்து 2,00,000 பேர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பியிருந்தனர்.


இவர்களில் இருந்து ஸ்பேஸ்.காம் அமைப்பு 1,058 பேரைத் தேர்ந்தெடுத்துள்ளது. இவர்களில் 297 பேர் அமெரிக்காவிலிருந்தும், 75 பேர் கனடாவிலிருந்தும், 62 பேர் இந்தியாவிலிருந்தும், 52 பேர் ரஷ்யாவிலிருந்தும் தேர்வாகியுள்ளனர்.


தேர்வான விண்ணப்பதாரர்கள் குறித்து மார்ஸ் ஒன் இணை நிறுவனரான பஸ் லன்ஸ்டோர்ப் கூறுகையில் புதிய மனிதக் குடியிருப்பு குறித்த உறுதியான பார்வையாக இந்தத் தேர்வு வெளிப்படும் என்று குறிப்பிட்டார். இத்தனை அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது குறித்து தங்களின் பாராட்டுதல்களையும், மகிழ்ச்சியையும் தெரிவிப்பதாகக் கூறிய லன்ஸ்டோர்ப் உடற்தகுதியிலும், மனத்தகுதியிலும் செவ்வாய்க் கிரகத்திற்கான தூதுவர்களாகச் செயல்படும் திறன் கொண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.


வரும் 2018 ஆம் ஆண்டில் தங்களது முதல் ஆளில்லா செவ்வாய்க் கிரக பயணத்தைத் தொடங்கும் இந்த நிறுவனம் 2024 ஆம் ஆண்டு நான்கு ஆண்களையும், ஒரு பெண்ணையும் செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்ப உள்ளது. அதன்பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நான்கு தேர்வாளர்களை செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பி வைக்க இருப்பதாக இந்த நிறுவனம் தங்களது இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.

0 comments:

Post a Comment