Saturday, 4 January 2014

பொது நலம் Vs சுயநலம் – ஜெயலலிதா விளக்கம்!




“பொது நலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால் பந்து போன்றது. இவை இரண்டும் காற்றால் இயங்குகின்றன. புல்லாங் குழல் முத்தமிடப்படுகின்றது. கால் பந்து காலால் உதைக்கப் படுகின்றது. ஏன்? தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால் பந்து உதைபடுகிறது. தான் வாங்கிய காற்றை இசை வடிவில் மற்றவர்களுக்கு கொடுப்பதால் புல்லாங்குழல் முத்தமிடப் படுகிறது. சுயநலம் உள்ள மனிதர்கள் புறக்கணிக்கப் படுவார்கள். பொதுநலம் உள்ள மனிதர்கள் போற்றப்படுவார்கள். “என்று குன்னூரில் நடந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு திட்ட விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.


நீலகிரி மாவட்டம் குன்னூரில், பொங்கலுக்காக இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு நலத் திட்டங்களை துவக்கி வைத்துப் பேசிய முதல்வர்:ஜெயலலிதா பேசும்போது, ”தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை ஒட்டி, ஆண்டுதோறும் வழங்கப்படும் வேட்டி சேலை திட்டத்தையும்; பொங்கல் திருநாளை தமிழக மக்கள் சீரோடும், சிறப்போடும் கொண்டாடும் வகையில் வழங்கப்படும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தினை இன்று நான் துவக்கி வைக்க உள்ளேன்.
3 கோடியே 45 லட்சத்து 29 ஆயிரம் பேர் பயனடையக் கூடிய வேட்டி-சேலைத் திட்டத்தினை இன்று நான் துவக்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


வரும் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 100 ரூபாய் என்ற சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.


தமிழகத்தின் நிதி நிலைமையையும் பொருட்படுத்தாமல் 281 கோடி ரூபாய் செலவில் இந்த சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பினை நான் வழங்கி உள்ளேன். ஏனெனில், பொங்கல் திருநாளை தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பது எனது அவா. என்னைப் பொறுத்தவரை, நேரம் பார்த்து தேவை அறிந்து முழுமையான உதவி செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். இது போன்ற உதவிகளை நான் செய்து வருவதால் தான் மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள். மக்கள் பக்கம் நான் இருக்கிறேன். அதனால் தான் உங்களுக்கு உதவி செய்யக் கூடிய இடத்திலே நீங்கள் என்னை வைத்து இருக்கிறீர்கள்.


அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த வேளையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆபிரகாம் லிங்கன் அப்போது ஜனாதிபதியாக இருந்தார். சிக்கல் மிகுந்த அந்த வேளையில் ஒரு மூதாட்டி, ஆபிரகாம் லிங்கனை அணுகி அவருக்கு ஆறுதல் கூறுவதாக நினைத்து ஒன்றைச் சொன்னார். “ஜனாதிபதி அவர்களே, எதற்கும் கவலைப்படாதீர்கள், கடவுள் நம் பக்கம் இருக்கிறார். அவர் நம்மைக் காப்பாற்றுவார்” என்று சொன்னார்.


இதற்கு பதில் அளித்த ஆபிரகாம் லிங்கன், “தாயே உங்கள் அன்பு மொழிக்கு நன்றி. நம்மைக் கடவுள் காப்பாற்றுவார் என்று எனக்கு நன்றாகத் தெரியும். அது அவருடைய கடமை. ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கடவுள் நம் பக்கம் இருக்கிறாரா என்பதை விட கடவுளின் பக்கம் நாம் இருக்கிறோமா என்பது தான் எப்போதும் என்னுடைய சிந்தனையாக இருக்கிறது” என்று ஆபிரகாம் லிங்கன் சொன்னாராம்.


இதைப் போல, எனது அரசின் மீது அவதூறுகளைப் பரப்பி, பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு, மக்களை தங்கள் பக்கம் வரவழைத்து விடலாம் என்று சிலர் பகல் கனவு கண்டு கொண்டு இருக்கின்ற சூழ்நிலையில், மக்களின் பக்கம் நாம் இருக்கிறோமா என்று நினைத்தே எனது அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் அமைந்துள்ளன. மக்களும் எனது அரசிற்கு உறுதுணையாக இருக்கிறார்கள். பொதுமக்களுக்கு என்னென்ன வழிகளில் எல்லாம் நன்மை செய்ய இயலுமோ, அந்த வழிகளைப் பற்றியே நான் சதா சர்வ காலமும் சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன்.


பொது நலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால் பந்து போன்றது. இவை இரண்டும் காற்றால் இயங்குகின்றன. புல்லாங்குழல் முத்தமிடப்படுகின்றது. கால் பந்து காலால் உதைக்கப் படுகின்றது. ஏன்? தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால் பந்து உதைபடுகிறது. தான் வாங்கிய காற்றை இசை வடிவில் மற்றவர்களுக்கு கொடுப்பதால் புல்லாங்குழல் முத்தமிடப் படுகிறது. சுயநலம் உள்ள மனிதர்கள் புறக்கணிக்கப் படுவார்கள். பொதுநலம் உள்ள மனிதர்கள் போற்றப்படுவார்கள். என்னைப் பொறுத்தவரையில் ஒரே நலம் தான் இருக்கிறது. அது தமிழக மக்களின் நலம். அதனால் தான் என் அன்புக்குரிய மக்களாகிய நீங்கள் எப்பொழுதும் என் பக்கம் இருக்கிறீர்கள். நானும் உங்கள் பக்கம் இருக்கிறேன்.


தமிழக மக்களுக்கும், தமிழகத்திற்கும் இன்னும் நிறைய செய்ய வேண்டிய பணிகள் கடமைகள் உள்ளன. அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றால் இந்திய அளவில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். உங்கள் உறுதுணையோடு அத்தகைய மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார்.

0 comments:

Post a Comment