Sunday, 22 September 2013

டிசைனர் குஷனில் குஷியான லாபம்!

Profit in the excited designer cushion

சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள மஞ்சுபாஷிணியின் வீட்டுக்குள் நுழைந்தால், திரும்பின பக்கமெல்லாம் அழகழகான குஷன்கள். சதுரமாக,  வட்டமாக, இதய வடிவத்தில், திண்டு மாடலில்.... இன்னும் விதம்விதமான வடிவங்களில் அசத்தும் அத்தனையும் அழகு குஷன்கள்.

கார் வைத்திருப்பவர்களும், வீட்டை ஆடம்பரமாக வைத்திருப்போரும் மட்டும்தான் ஒரு காலத்தில் குஷன் உபயோகிப்பார்கள். இன்று வீட்டுக்கு வீடு  அவற்றின் உபயோகத்தைப் பார்க்க முடிகிறது. ‘‘எம்.ஏ எகனாமிக்ஸ் படிச்சிருக்கேன். அடிப்படையில நான் ஒரு பியூட்டிஷியன். அழகு விஷயத்துல  ஆர்வம் அதிகம். அழகழகான கைவினைப் பொருள்கள் பண்றதுலயும் ஈடுபாடு உண்டு. ஒருமுறை ஒரு கடையில குஷன் பார்த்தேன். அதோட  நேர்த்தியும், டிசைனும் ரொம்பப் பிடிக்கவே, கத்துக்கிட்டு நானும் செய்ய ஆரம்பிச்சேன்.

குஷன்ல பொதுவா வட்டம், சதுரம், இதய வடிவம்னு குறிப்பிட்ட மாடல்கள் பலருக்கும் தெரியும். ஆனா கற்பனை வளம் இருந்தா, பதினஞ்சுக்கும்  மேலான மாடல்கள் பண்ணலாம்’’ என்கிறார் மஞ்சுபாஷிணி. ‘‘சாதாரண தலையணையா உபயோகிக்கலாம். வீட்டுக்குள்ள அலங்காரப் பொருளா  வைக்கலாம். கார் ஓட்டறவங்களுக்குப் பயன்படும். யாருக்கு வேணாலும் அன்பளிப்பா கொடுக்கலாம். சாட்டின், வெல்வெட், சில்க் காட்டன், காட்டன்...  இப்படி எந்தத் துணியிலயும் பண்ணலாம்.

இது தவிர உள்ளே அடைக்க நைலான் பஞ்சும், கலர் நூலும், ஊசியும் மட்டும்தான் தேவை. வேகத்தையும், நேரத்தையும் பொறுத்து ஒரு நாளைக்கு 2  முதல் 3 வரை பண்ணலாம். தலையணைக் கடைகள், ஃபேன்சி ஸ்டோர், இன்டீரியர் டெகரேஷனுக்கான பொருள்கள் விற்கற கடைகள், கார்  அலங்காரப் பொருள்கள் விற்கற கடைகள்ல ஆர்டர் எடுக்கலாம். வட இந்திய மக்கள் இதை அதிகமா பயன்படுத்தறாங்க. அவங்க அதிகம் வசிக்கிற  ஏரியா கடைகள்ல இது நிறைய விற்பனையாகும். குறைஞ்சபட்சம் 200 ரூபாய்லேருந்து, அதிகபட்சமா 700 ரூபாய் வரைக்கும் விற்கலாம். வருஷம்  முழுக்க தொய்வில்லாத பிசினஸ் இது’’ என்கிறார் மஞ்சு.
  •  

0 comments:

Post a Comment