Tuesday, 10 September 2013

சுகப்பிரசவத்திற்கு தேவை சரியான எடையும், உடல் உழைப்பும்!


சுகப்பிரசவத்திற்குப் பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுப்பது மிக மிக முக்கியமான ஒன்று. இது கையில் வளையல் அணிவது போன்ற செயல்பாடுதான். சிறிய அளவுள்ள வளையல் பெரிய மணிக்கட்டு உள்ள கையில் எப்படி நுழையாதோ, அதுபோல இடுப்பு எலும்பு சிறியதாக இருந்து குழந்தையின் தலை பெரியதாக இருந்தால், குழந்தையின் தலை வெளியே வராமல் மாட்டிக்கொள்ளும்.

பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குனிந்து வீட்டைச் சுத்தம் செய்வது, அமர்ந்து துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் ஈடுபடுவது நல்லது. அமர்ந்தே வேலை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும்.

மேலும், உடற்பயிற்சி செய்யும்போது எண்டோர்ஃபின் என்கிற ஹார்மோன் சுரக்கும். இதனால், உடல் தசைகள் வலுப்பெற்று, குழந்தை சரியான நிலையில் இருக்கும். பெண்களின் பிறப்புறுப்பு நல்ல நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும். பிரசவமும் சுலபமாகும். தினமும் காலையில், முக்கால் மணி நேரம் மூச்சு இரைக்காதவாறு மெதுவாக நடக்கலாம்.

கர்ப்பமாக இருக்கும்போது பெண்களின் எடை 10 முதல் 12 கிலோ வரை கூடலாம். ஆனால், சில பெண்களுக்கு 15 கிலோவுக்கும் அதிகமாக எடை கூடும். இவர்களுக்கு இரட்டைக் குழந்தையாக இருக்கலாம் அல்லது குழந்தையின் எடை அதிகமாக இருக்கலாம்.

இவை இரண்டுமே இல்லை என்றால் உடலின் எந்தப் பகுதியிலோ நீர் கோத்திருக்கிறது என அர்த்தம். இதனால், கர்ப்பிணிகளின் கால் வீங்கிக் காணப்படும். பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு கால் வீக்கம் இருப்பது இயல்புதான். ஆனால், இந்த வீக்கம் கணுக்காலுக்குக் கீழே மட்டும் இருக்கும்.

அதுவும் நன்றாகத் தூங்கி எழுந்ததும் சரியாகிவிடும். அப்படி இல்லாமல் கணுக்காலைத் தாண்டியும் வீக்கம் இருந்தால் உப்பு அதிகமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். சிறுநீர்ப் பரிசோதனை மூலம் உப்பின் அளவைக் கண்டறிந்து, அதைக் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.

இத்துடன் ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் பேறுகாலத்தின்போது வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துக் குணப்படுத்த வேண்டியது அவசியம். 

0 comments:

Post a Comment