Sunday, 6 October 2013

மோடி vs ராகுல்!





பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மன்மோகன் சிங், திக்விஜய் சிங் உட்பட காங்கிரசின் மூத்த தலைவர்கள் ராகுலின் தலைமையில் பணி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மோடி, ராகுல் இருவரின் பலம், பலவீனம் பற்றிய அலசல்

க்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் இருக்கின்றன. ஆனால் எல்லாக் கட்சிகளும் அதற்குள் வரிந்து கட்டிக்கொண்டு தயாராகத் தொடங்கி விட்டன.  பாரதிய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவித்து விட்டது.  அத்வானி உட்பட சில பா.ஜ.க. தலைவர்கள் முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் தற்போது பகிரங்கமாகவே மோடியை ஆதரித்துப் பேசுகிறார்கள். காங்கிரஸ் கட்சியோ, ‘தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளரை அறிவிக்கும் வழக்கம் தங்கள் கட்சிக்கு இல்லை’ என்று சொன்னாலும், அதன் பிரதமர் வேட்பாளர் யார் என்று ஊகிப்பது அத்தனை கடினமானதல்ல.

மோடியை பிரதமர் வேட்பாளர் என அறிவிக்கும் முன்பே, கடந்த ஆண்டு (2012) டிசம்பர் 10-ஆம் தேதியன்றே 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை ராகுல் வழி நடத்துவார், ‘அவருக்கு வெகு விரைவில் ஒரு முக்கியப் பதவி காத்திருக்கிறது’ என காங்கிரஸ் அறிவித்துவிட்டது. அந்த அறிவிப்பிலேயே  2014 வரை மன்மோகன் பிரதமராகத் தொடர்வார் எனச் சொன்னதன் மூலம் அடுத்த பிரதமராக மன்மோகன் நீடிக்க வாய்ப்பில்லை எனவும் சூசகமாக உணர்த்தியுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங்கும் ‘பிரதமர் பதவிக்குப் பொருத்தமான நபர் ராகுல்காந்தி, அவர் தலைமையின் கீழ் பணி செய்ய நான் தயாராகவே உள்ளேன்’ என்று அண்மையில் செப்டம்பர் 8-ஆம் தேதி ரஷ்யாவில் ஜி-2 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டு தாயகம் திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களிடம் கூறினார். செப்டம்பர் 13-ஆம் தேதி சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்ய சிந்தியா போன்றோர் அடுத்த பிரதமர் ராகுல் என்பதைப்போல பேசியிருக்கிறார்கள்.
சுசில்குமார் ஷிண்டே, திக்விஜ சிங் உட்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ராகுல் பிரதமர் ஆவதற்கு விருப்பம் தெரிவித்து உள்ளனர். எனவே பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது சொல்லாமலே உணர்த்தப்பட்டு விட்டது.

சரி, பிரதமர் பதவிக்குப் போடியிடவுள்ள நரேந்திர மோடி, ராகுல் இருவரின் பலம், பலவீனம் பிரதமர் ஆவதற்கான தகுதி, பிரதமராவதற்குத் தடையாக உள்ளவை எவை?

நரேந்திர மோடி

கல்வித் தகுதி : அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம்.

பலம் : டீக்கடை பணியாளராக வாழ்க்கையைத் துவக்கியவர் என்பதால் அடித்தள மக்களின் வாழ்க்கையை அனுபவப் பூர்வமாக அறிந்தவர். இளம் வயதிலிருந்தே அமைப்பு சார்ந்து செயல்பட்டு வருவதால், ஒர் அமைப்பைக் கட்டுவது, வளர்ப்பது, வலுப்படுத்துவது போன்ற நுட்பங்களை அறிந்தவர்.  தொடர்ந்து 4 முறை ஒரு மாநிலத்தின் முதல்வராகப் பணியாற்றிய நிர்வாக அனுபவம். ஊழல் குற்றச் சாட்டுகளுக் குள்ளாகாதது.  மாநில அரசியலில் வளர்ந்ததால் இந்திய அரசமைப்பில் மாநிலங் களுக்குள்ள முக்கியத்துவம் பற்றிய உணர்வு, விரைவாக முடிவெடுக்கும் திறன், மேடைப் பேச்சுக்களால் கூட்டத்தை வசீகரிக்கும் தன்மை, சமூக வலைத்தளங்கள், இணையம், லேசர் காட்சிகள் என நவீனத் தொழில்நுட்பத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சாதுர்யம். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர், அரசியலில் வளர்த்தெடுக்க குடும்பம்/வாரிசு இல்லாதிருப்பது.

பலவீனம் : தன்னிச்சையாக முடிவெடுக்கும் autocratic leader  என வர்ணிக்கப்படுபவர். மத்திய அரசில் இதுவரை ஒரு எம்.பி.யாகக்கூட பதவி வகித்த அனுபவம் இல்லை. ஒரு மொழி, ஒரு கலாச்சாரம் கொண்ட ஒரு மாநிலத்தை நிர்வகிப்பதுபோல, பல்வேறு மொழிகள், பொருளாதார வேறுபாடு கொண்ட மாநிலங்கள், ஜாதி, மதம் கொண்ட நாட்டை நிர்வகிக்க முடியுமா என்ற சந்தேகம், தீவிரமான கருத்துக்கள்/செயல்களால் நாட்டில் உணர்வு ரீதியான பிளவை ஏற்படுத்தக் கூடியவர் (Poloariser) திருமணம், குடும்பம் போன்ற விஷயங்கள் மூடுமந்திரமாக இருக்கும் ரகசியம்.

வாய்ப்புகள் : வர்த்தகம், தொழில், ஊடகம், இந்துத்துவா அமைப்புகள் என்று பல்வேறு தரப்பிலும் இருக்கும் ஏகோபித்த ஆதரவு. சமூக வலைத்தளங்களையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதால் இளைஞர்கள் மத்தியில் உள்ள பிரபலம், கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவு, விலையேற்றம், பெருகியுள்ள ஊழல்கள், பரவிவரும் வன்முறை, அயலுறவுகளில் நடந்த சோதப்பல்கள் ஆகியவை காரணமாக ஆளும் கட்சி மேல் ஏற்பட்டுள்ள அதிருப்தி, அந்நிய முதலீட்டை ஈர்க்கும் சக்தி கொண்டவர் என்பதால் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பார் என்ற நம்பிக்கை.

தடைகள்: தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடியவர் என்பதால் கூட்டணியை அனுசரித்துப் போவதில் இருக்கும் சிக்கல்; ஒரு மாநிலத்தை திறமையாக நிர்வகிப்பதைப்போல இந்தியா போன்ற பல்வேறு மொழி, இன, கலாச்சாரம் கொண்ட நாட்டை நிர்வகிக்க முடியுமா என்ற சந்தேகம்,  குஜராத் அன்னிய முதலீட்டைப் பெறுவதில் முன்னணியில் இருந்தாலும் மனித வளர்ச்சிக் குறியீடுகளில் (HDI) மற்ற சில மாநிலங்களைவிட பின்தங்கியே இருப்பதால் நிர்வாகத் திறமை மீது ஏற்பட்டுள்ள சந்தேகம். 2002 குஜராத் கலவரம் எழுப்பியுள்ள கேள்விகள், அச்சம், சர்ச்சைகளுக்குள்ளான ஆர்.எஸ்.எஸ்சின் வெளிப்படையான ஆதரவு.

ராகுல் காந்தி

கல்வித் தகுதி : எம்.பில் (M.Phil)

பலம் :  வலுவான, பிரபலமான குடும்பப் பின்னணி, கட்சியினரின் ஏகோபித்த, ஆதரவு,  நாடாளுமன்ற அனுபவம், காங்கிரசின் புதிய முகம் என்பதால் ஏற்படும் வசீகரம்.

பலவீனம் : இதுவரையில் மத்திய அரசில் எந்தப் பொறுப்பையும் ஏற்று செயல்பட்டது இல்லை. எனவே ராகுலின் செயல்திறன் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. உத்தரப்பிரதேசம், பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் ராகுல் தலைமையில் தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் இரண்டு மாநிலங்களிலும் படுதோல்வி அடைந்தது. இவரது குடும்பத்து முன்னோர்களைப்போல இவருக்கு மக்களிடம் செல்வாக்கு இருக்கிறதா என்றெழுந்துள்ள கேள்வி.

வாய்ப்புகள்: நாடு முழுவதும் அமைப்பு பலம் கொண்ட கட்சியின் ஆதரவு, மோடிக்கு எதிரான மதச் சார்பின்மையில் நம்பிக்கை கொண்டவர்களின் வாக்குகள்,  செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தாலும் அடித்தள மக்கள் மீது அக்கறை காட்டி அவர்களை வலுப்படுத்த வேண்டும் எனத் தொடர்ந்து பேசி வருவதால் ஏற்பட்டுள்ள நன்மதிப்பு, உள்கட்சித் தேர்தல்களை ஜனநாயக முறையில் நடத்தக் காண்பித்த ஆர்வம் தந்துள்ள நம்பிக்கை.

தடைகள்: ஆட்சியின் மீ தேற்பட்டுள்ள அதிருப்தி, எம்.பி.யாக இருந்தாலும் நாடாளுமன்ற விவாதங்களில் பெருமளவில் பங்கேற்காதது, தொழில் கூட்டமைப்பினர் முன் பேசிய போது அவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக பேசாதது, ஊடகங்களின் ஆதரவைப் பெற முயற்சிக்காதது, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பும் வாக்காளர்கள், திருமணம் பற்றிய ரகசியங்கள்.


நரேந்திர மோடி  ஏன் பிரதமர் ஆகவேண்டும்?
பத்ரி சேஷாத்ரி

(1) நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு ஒரு வடிவம் கொடுத்து அவற்றைக் கூர்மையாக மக்கள் முன்பு வைத்தல்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது மகாத்மா காந்தி, இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்பதைத் தெளிவான குறிக்கோளாக்கி, அதை அடைவதற்கான  செயல்திட்டங்களை வகுத்து, அந்தப் போராட்டங்களை முன்னின்று நடத்தினார். போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய இரண்டாம் கட்டத் தலைவர்களையும் உருவாக்கினார். மக்கள் திரண்டெழுந்து  அவர்பின் சென்றனர். ஆனால் சுதந்தரத்துக்குப்பின் அம்மாதிரியான ஒரு திரண்டெழல் இந்தியாவில் நடைபெறவில்லை.

ஒப்பீட்டில், லீ குவான் யூவின் கீழ் சிங்கப்பூர் என்னும் சிறு நாடும் டெங் சியோபிங் தலைமையில் சீனா என்னும் பெரும் நாடும், பொருளாதார அடிப்படையில் பெரும் பாய்ச்சல் நிகழ்த்தி இந்தியாவை வெகுவாகத் தாண்டிச் சென்றுவிட்டன.

அடுத்தடுத்து வந்த இந்தியத் தலைவர்கள் மக்களைத் திரட்டி, பொருளாதாரத்தை வளர்த்து, ஏழைமையைப் போக்கி, வளமான ஒரு நாட்டைக் கட்டியமைக்க வழி காட்டவில்லை. நரசிம்மராவ் காலத்தில் நிகழ்ந்த பொருளாதாரச் சீர்திருத்தத்தின்போதுகூட, அரசுத் தரப்பிலிருந்து சில மாற்றங்கள் நிகழ்ந்தனவே ஒழிய, மக்களுடன் எவ்வித உரையாடலும் இருக்கவில்லை.

ஆனால் நரேந்திர மோடி பொதுமக்களுடன் பேசி, எம்மாதிரியான அரசு வேண்டும், எம்மாதிரியான பொருளாதாரம் வேண்டும் ஆகியவற்றுக்கு வடிவம் கொடுக்கிறார். அதனை இளைய சமுதாயம் வெகுவாகப் பின்பற்ற விரும்புகிறது. இந்த மனநிலை மாற்றம், இந்தியாவை மேலே செலுத்தும் உந்துசக்தியாக இருக்கும்.

(2) உள்கட்சி ஜனநாயகம்

இதுநாள்வரை இந்தியக் கட்சிகளில் இல்லாத உள்கட்சி ஜனநாயகம் மோடியினால் மீண்டெழுந்துள்ளது. இந்தியக் கட்சிகள் அனைத்தும் குடும்ப நிறுவனங்கள் அல்லது சீனியாரிட்டியை மட்டுமே முரட்டுத்தனமாக முன்வைக்கும் அமைப்புகள்.

பாரதிய ஜனதாவிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் மட்டும்தான் தலைவர் பதவிகள் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும். பாரதிய ஜனதாவில் கடந்த இரண்டாண்டுகளில் மோடி மேலெழுந்து வந்தது முக்கியமானதொரு வரலாற்று நிகழ்வு. கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு தொண்டரின் ஆதரவையும் பெற்று, பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் மாநில முதல்வர்களின் ஆதரவைப் பெற்று, கட்சியின் பெரும்பாலான மூத்த தலைவர்களின் ஆதரவையும் பெற்று, கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக முதலில் நியமனம் பெற்று, அதன்பின் அத்வானி போன்ற மூத்த தலைவர்களின் எதிர்ப்பை லாவகமாகக் கையாண்டு, தற்போது கட்சியின் பிரதமர் வேட்பாளர் என்ற இடத்தை மோடி கைப்பற்றியுள்ளார்.

இதற்கு இந்திய அரசியலில் முன்னுதாரணமே கிடையாது.

மோடி, ஆர்.எஸ்.எஸ்ஸால்தான் புகுத்தப்பட்டவர் என்பது நியாயமற்ற கூற்று. ஆர்.எஸ்.எஸ். விரும்பாத ஒருவர் பாஜகவில் எளிதில் பிரதமர் வேட்பாளர் ஆகமுடியாது. ஆனால் அதே நேரம் ஆர்.எஸ்.எஸ்ஸையும் தன்னை ஏற்கும்படி மோடிதான் வலியுறுத்தினார் என்பதைக் கவனிக்க வேண்டும். தங்களுக்கு மிகவும் ஏற்புடைய நிதின் கட்கரி என்பவரை ஆர்.எஸ்.எஸ்ஸால் பாஜக  கட்சித் தலைவராகத் தக்கவைக்க முடியவில்லை என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.

மோடியின் இந்தச் சாதனை காரணமாக, குறைந்தபட்சம் பாஜகவிலாவது உள்கட்சி ஜனநாயகம் பெருகும் என்பது நம்பிக்கை.

(3) கவர்ச்சி அல்ல; வளர்ச்சிதான் பிரதானம்

இந்திய அரசியலில் பொதுவான அம்சம்,  கவர்ச்சிகரமான கோஷங்களையும் இலவசங்களையும் அள்ளி வீசுவதன் மூலம் ஆட்சியைப் பிடிப்பது. ‘ஏழைமையைஒழிப்போம்’ என்று இந்திரா காந்தி கூறினார். எப்படி ஒழிப்பீர்கள் என்று யாரும் கேட்கவில்லை; ஏன் ஒழிக்கவில்லை என்றும் யாரும் கேட்கவில்லை.

‘அளக்கக்கூடிய வெளிப்பாடு’ என்பது பற்றி நம் அரசியல் கட்சிகள் ஒருபோதும் பேசுவதில்லை. ஐந்து ஆண்டுகளுக்குள் அரசின் வருமானத்தை இவ்வளவு பெருக்குவேன்; அரசின் நிதிப் பற்றாக்குறையை இந்த அளவுக்குக் குறைப்பேன்; மக்களின் சராசரி வருமானத்தை இந்த அளவுக்கு அதிகரிப்பேன்; நாட்டின் உற்பத்தியை இத்தனை சதவிகிதம் அதிகரிப்பேன்; உள்நாட்டுத் தொழில்களை ஊக்குவித்து வர்த்தக ஏற்றுமதி-இறக்குமதி வித்தியாசத்தை இந்த அளவுக்குக் குறைப்பேன்; கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை இந்த அளவுக்கு அதிகரிப்பேன் என்று தெளிவான கொள்கைகளை யாருமே முன்வைப்பதில்லை.

நரேந்திர மோடி ஒருவர் மட்டுமே இதுபோன்ற தகவல்களைப் பொதுமக்களிடம் பகிர ஆரம்பித்துள்ளார். இவை அனைத்தும் தெளிவான வகையில் தேர்தல் அறிக்கையில் வரும்போதுதான் ஒரு நாடே ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கிச் செல்ல முற்படும். இல்லாவிட்டால் திக்குத் தெரியாமல் அடர்கானகத்தில் அலைவது போலத்தான் ஆகிவிடும்.

(4) அனைவரும் சமம்

தமிழகமும் இந்தியாவும் பொதுவாகப் பார்த்துள்ள அரசியலில், குறிப்பிட்ட வாக்கு வங்கிகள் குறிவைக்கப்படுகின்றன. அவர்களுக்கு சலுகைகள் தரப்படுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு, அவர்களுடைய வாக்குகள் அனைத்தும் மொத்தமாக வேட்டையாடப்படுகின்றன.

இறுதியாக, கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா அல்லது தரப்பட்ட சலுகையால் உண்மையிலேயே சம்பந்தப்பட்ட சமூகங்களுக்கு நன்மை ஏற்பட்டதா என்பது பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஆதாயத்தைப் பங்குபோட்டு அதில் அதிகப் பங்கை ஒரு சமூகத்துக்குத் தருவதாகச் சொல்கிறார்களே தவிர, ஒவ்வொருவருக்கும் நியாயமான பங்கு என்ற கருத்து முன்வைக்கப்படுவதே இல்லை. நாங்கள்தான் உங்களுக்கு அதிகம் செய்கிறோம், எனவே நீங்கள் எங்கள் பக்கம்தான் இருக்கவேண்டும் என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. தனக்கு ஒருவர் ஏன் அதிகம் தருவதாக ஆசை காட்டுகிறார் என்று அந்தச் சமூக மக்களும் கேட்பதில்லை. அதிகம் நிஜமாகவே கிடைத்துள்ளதா என்று ஆராய்வதும் இல்லை.

நரேந்திர மோடிதான் இந்திய அரசியலிலேயே முதல் முதலாக, இந்த ஆசை காட்டும் செயலை அறவே விட்டொழித்துள்ளார். அனைவருக்கும் வளர்ச்சி சமமாக வரும் என்று நியாயமான வார்த்தைகளை முன்வைக்கிறார்.

மற்ற எல்லாவற்றையும்விட, இவை காரணமாகவே நரேந்திர மோடி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்."

அறிந்தவர்கள் சொல்கிறார்கள்

கடந்த 2008-ஆம் ஆண்டு முதன்முறையாகவும் அதன்பின் கடந்த ஜூலையில் இரண்டாவது முறையும் குஜராத் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்த பத்திரிகையாளர் சந்திரமௌலி: 
நான் நேரில் பார்த்துத் தெரிந்துகொண்டதில் முதன்மையான விஷயம், அரசின் எந்தத் திட்டமானாலும் அதன் பலன் அடிமட்டம் வரை சென்று சேர்வதற்கான எல்லா சாத்தியங்களையும் ஏற்படுத்தி இருப்பது (Efficient delivery) system. பூஜ் பகுதியில்  10 ஆண்டுகளுக்கு முன் பூகம்பம் ஏற்பட்டது. அந்தக் கட்ச் பகுதியில் மட்டும் 12 ஆயிரம் பேருக்குமேல் இறந்து போனார்கள். நூற்றுக்கணக்கான கிராமங்கள் தரைமட்டமாயின, இடிந்த கட்டிடங்களின் எண்ணிக்கை 10 லட்சத்திற்கும்மேல். வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள் எல்லாம் தகர்ந்து போயின. இன்று பார்த்தால் அங்கு அந்தப் பூகம்பத்தின் சுவடே தெரியாத அளவிற்கு உள்கட்டமைப்பு உள்ளது. பூகம்பத்தின் பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்வதற்காக ஒரே ஓர் ஆயுர்வேத மருத்துவமனையை மட்டும் பூகம்பம் பாதித்த நிலையிலேயே விட்டு வைத்திருக்கிறார்கள். இயற்கைப் பேரிடர் மேலாண்மைப் பள்ளி, கல்லூரிகளில் பாடமாக உள்ளது. பூகம்ப  ஆராய்ச்சிக்காக உலகத் தரம் வாய்ந்த நிறுவனம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

குஜராத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள கட்ச் வளைகுடா ஆண்டிற்கு 400 மி.மீ. மட்டுமே மழை பெய்யும் வறட்சியான பகுதி. ஆனால் மாநிலத்தின் தெற்குப் பகுதியில் ஆண்டிற்கு 1,500 மி.மீ. மழை பொழிகிறது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வறட்சி பாதிக்கும் பகுதிகளும் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் பகுதிகளும் சமமாக குஜராத்தில் உள்ளன. அதிகமாக வெள்ளப் பகுதியில் உள்ள நீரை வறட்சியான பகுதிகளுக்குக் கொண்டு செல்ல கால்வாய்கள், கிளைக் கால்வாய்களை ஏற்படுத்தி எல்லா இடங்களுக்கும் தேவையான நீர் கிடைக்கச் செய்திருக்கிறார்கள். எந்த விஷயத்தையும் பன்முகப் பயன்பாட்டிற்காகச் செய்வது மோடியின் பாணி."

ராகுல் காந்தி ஏன் பிரதமராக வேண்டும்?
பேராசிரியர் க. பழனித்துரை

இந்திய நாடு என்பது எத்தன்மையது என்பதைப் புரிந்துகொண்டால், இந்த நாட்டை வழிநடத்த எப்படிப்பட்ட தலைவர் வேண்டும் என்று நாம் எளிதாக தீர்மானம் செய்துவிடலாம். இந்தியா மொழியால், கலாச்சாரத்தால், இனத்தால், ஜாதியால், மதத்தால், பண்பாட்டால், எல்லை இல்லா வித்தியாசங்களைக் கொண்ட ஒரு நாடு. இதற்கு மேலாக சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிக அளவில் கொண்ட நாடு இந்தியா. இவ்வளவு வேறுபாடுகளையும்
வித்தியாசங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் கொண்ட நாட்டில் மக்களாட்சி செயல்படுவது என்பதே பலருக்கு ஆச்சரியம். ஆகையால்தான், ‘இந்தியப் புதிர்’ என்று இந்தியாவை அழைப்பார்கள் மேற்கத்திய அறிஞர்கள். பிரதமர் பதவிக்கு இந்த வேறுபாடுகள், வித்தியாசங்கள் அனைத்தையும் கடந்து இந்திய நாட்டு ஒற்றுமையின் அடையாளமாக விளங்கும் சகிப்புத்தன்மையையும் அனைவரையும் அரவணைத்து உள்வாங்கும் மனோபாவமும் கொண்ட ஒரு மனிதர் தேவை.

பரந்துபட்ட இந்தியாவில் மாற்றங்களைக் கொண்டுவர எல்லா நிலைகளிலும் தலைவர்கள் வேண்டும். கிராமப் பஞ்சாயத்திலிருந்து இந்தியக் குடியரசு வரை தலைவர்கள் வேண்டும். எல்லோரும் இணைந்து பணியாற்றித்தான் மாற்றங்களைக் கொண்டுவர முடியும். நான் பிரதமரானால் அனைத்தும் மாறி விடும், மாற்றி விடுவேன். ஆகவே, என்னைப் பிரதமராக்குங்கள் என்று கூறுவது மக்களாட்சியில் மக்களை அரசிடமிருந்து வேறுபடுத்தி அரசு சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்குத்தான் பயன்படுமேயன்றி, ஒரு கூட்டுத் தலைமையை உருவாக்கி, அந்தக் கூட்டுத் தலைமையின் செயல்பாட்டில் நிறுவனங்களையும், அமைப்புகளையும் வலுப்படுத்தி மக்களுக்கு சேவை செய்யப் பயன்படாது.

மகாத்மா காந்தி நான் சுதந்திரம் வாங்கித் தருகிறேன், நான் இந்தியாவை மாற்றுகிறேன் என்று, என்றும் கூறியது கிடையாது. ஒரு நாட்டின் தலைவிதியை தலைவன்தான் நிர்ணயிக்க முடியும் என்று ஓர் அரசியல் கட்சித் தலைவர் நம்பினால் அது அவர் மக்கள்மேல் எந்த நம்பிக்கையும் வைக்கவில்லை என்பதைத்தான் காட்டும்.

மக்களாட்சி நடைபெறுகின்ற நாட்டில், நாட்டின் தலைவிதியை அந்த நாட்டு மக்கள்தான் தீர்மானிப்பார்கள். மக்களாட்சியில் மக்கள் மூலமாக மாற்றத்தையடைய நமக்குத் தேவை மக்கள் தலைவர்கள். அவர்கள் மக்களுடன் சேர்ந்து, மக்களுக்கு வழிகாட்டி செயல்படுவதுதான் ஒரு மக்களாட்சி நாட்டில் நடைபெற வேண்டிய பிரதானச் செயல்பாடு.

எந்த ஒரு தலைவருக்கும் ஒரு பார்வை இருக்கும். அந்தப் பார்வை என்பது ஏழைகளிலிருந்து துவங்க வேண்டும். இன்றையச் சூழலில் சந்தையும் தோற்றது, அரசும் தோற்றது என்ற நிலையில் ஏழைகளைக் காப்பதும் அவர்களது வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்வதும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை சட்டத்தின் மூலம் உறுதி செய்வதையும் அவர்களை அதிகாரப்படுத்துவதையும் முன்னிலைப்படுத்தும் ஒரு தலைவர்தான் இன்று நமக்குத் தேவை. மக்களை மதத்திற்குள்ளும், ஜாதிக்குள்ளும் பிரித்தாள்வோர் வளர்ச்சியைக் கொண்டுவர முடியாது.

இந்தியா என்பது ஒரு சாதாரண நாடு அல்ல. தனது செயல்பாடுகளின் வழி, உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு மிகப்பெரிய நாடு. இந்த நாட்டு அரசாங்கத்தின் தலைவர்  என்பவர் சர்வதேச நாடுகளின் நம்பிக்கையைப் பெற்றவராக இருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் உலக நாடுகளின் கண்டனங்களுக்கு ஆளாகாமல் உள்ளவராகவாவது இருக்க வேண்டும். அந்தத் தலைவருக்கு வயதோ, கல்வித் தகுதியோ தலைமையை நிர்ணயிக்காது. இந்த நாட்டில் வாழும் கோடான கோடி ஏழை மக்களுக்கு நம்பிக்கையைத் தரும் உள்ளம் கொண்டவராக இருப்பதே ஒப்பற்ற தகுதியாகும்.

இந்த நாட்டை ஆங்கிலேயரிடமிருந்து விடுவிப்பதற்கு நம் மக்களுக்கு வழிகாட்டி, மக்களுடன் போராடிய தலைவர்களின் அப்போதைய வயதை எண்ணிப் பார்த்தால் யாரும் வயதானவர்கள் கிடையாது, அனைவரும் இளைஞர்களே. ஆகவே வயதோ, கல்வித் தகுதியோ தலைமையை நிர்ணயிக்காது.

இந்திய நாட்டின் பிரதமராக வரக்கூடியவர் மக்களை இணைக்கக்கூடியவராக இருக்க வேண்டுமேயன்றி பிரிக்கக்கூடியவராக இருக்கக்கூடாது. மக்களை வாக்குக்காக வாக்காளராகப் பார்க்கும் தலைவராக இல்லாமல் மக்கள் இந்த நாட்டின் மதிப்புமிகு குடிமக்கள், பொறுப்புள்ளவர்கள் என்று எண்ணிச் செயல்படக்கூடியவராக இருக்க வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டின் தலைவராக வருபவருக்கு மிக முக்கியமாக, கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் மற்றவர் கருத்துக்களை மதிக்கும் பக்குவமும் இருக்க வேண்டும். நான் சொல்வதுதான் இறுதியானது, உறுதியானது, முடிவானது, எனக்குத் தெரியும் என்ற மனோபாவம் கொண்டவராக இருக்கும் எந்தத் தலைவராலும் இந்தியாவை முன்னேற வைக்க முடியாது.

மக்களைக் கவர்வதற்காகவும் தன் புகழை வளர்ப்பதற்காகவும் பொதுத்தொடர்பு வியாபார நிறுவனங்கள் மூலம் விளம்பரம் தேடி, பதவியைப் பிடிக்க அலைகின்ற சூழலில் மக்களிடம் வேலை செய்து, மக்களிடம் அன்பையும் நம்பிக்கையையும் பெற்று பதவிகளுக்கு வருவதுதான் சிறந்தது எனக்கூறி, இதற்காக எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை என்று சொல்லும் ஒருவர்தான் நமக்கு இன்று பிரதமராக வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட்டால் நான் பிரதமராவது கடினம் என்று பதவி வெறியுடன் அலையும் எவரும் அந்தப் பதவிக்கு வருவதற்குத் தகுதியற்றவர்கள்.

உலகமயமான பொருளாதாரச் சூழல் ஊழலை உலகமயமாக்கும்போது ஊழலை நியாயப்படுத்தாமல் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு ஊழல் நிரூபணமானால் தண்டிக்கப்படல் வேண்டும் என்று சொல்வதுடன் தன் கட்சியைச் சார்ந்த யாரையும் ஊழல் என்று குற்றம் சாற்றப்பட்டுவிட்டால் அவர்கள் வகித்த பதவியைத் தொடர அனுமதிக்கக் கூடாது என்று சொல்லும் துணிச்சலும், அதன்மேல் நடவடிக்கை எடுக்கும் திடமும் வேண்டும்.

மேற்கூறிய அடிப்படைகளையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது ராகுல் காந்திக்கு மேற்சொன்ன அத்தனை தகுதிகளும் இருக்கின்றன. அவர் ஒரு ஜனநாயகவாதியாக, எதார்த்தத்தை ஒப்புக்கொள்பவராக, நான் என்று சொல்லாமல் நாம் என்று சொல்பவராக, உண்மை வெல்லும் என்பதில் நம்பிக்கை கொண்டவராக, மக்களை நினைப்பவராக, பதவி என்பதை செயலிலிருந்து பெறவேண்டுமேயல்லாமல் கம்பெனி விளம்பரத்தின் மூலம் பெறக்கூடாது என்பதில் திண்ணம் உள்ளவராக, உலக அரங்கில் கண்டனங்களைப் பெறாதவராக, ஜாதி, மதம், பிராந்தியம் என்பதைக் கடந்தவராக, தாழ்நிலை உணர்வுக்குத் தீனியிட்டுப் பகைமை அரசியலை வளர்க்காமல் அரசியல் பண்பாடு பேணும் தலைவராகத் தெரிகிறார்."

அறிந்தவர்கள் சொல்கிறார்கள்
தில்லியில் ராகுல் காந்தியின்கீழ் இளைஞர்  காங்கிரசில் பணியாற்றிய ஜோதிமணி:

குஜராத்தின் வளர்ச்சி குறித்து எவ்வளவுதான்  பேசினாலும் அவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட  பிரிவினர் மட்டுமே பயனடைவதாக உள்ளது. ஒருங்கிணைந்த வளர்ச்சியாக இருந்தால்தான் அனைத்துத் தரப்பு மக்களும் பயனடைய முடியும். அதற்கான தெளிவான பார்வை ராகுல் காந்தியிடம்தான் உள்ளது. உட்கட்சி ஜனநாயகம் இருக்க வேண்டும். தனிநபர் சார்ந்து அரசியல் கட்சிகள் இருக்கக் கூடாது என்பதற்காக உழைப்பவர் ராகுல். மாற்றம் உடனடியாகத் தெரியாது. ஆனால் அவரின் அணுகுமுறை வலுவான அடித்தளத்தை நாட்டிற்கு ஏற்படுத்தித் தரும்". மேலும், ராகுல் அடித்தள மக்களிடம் குறிப்பாக குழந்தைகள், இளைஞர்களிடம் பேசும்போது அவர் முகத்தில் ஆர்வம் ஒளிரும். அவர்கள் முன்னேறினால்தான் இந்தியா முன்னேறும், அவர்கள் முன்னேற வேண்டுமானால் அவர்களுக்கு ஒரு கனவு இருக்க வேண்டும், அந்தக் கனவை நாம் விதைக்க வேண்டும் என்பது அவரது அணுகுமுறை."

பிரபலமான பிரதமர் வேட்பாளர் யார் என்ற கருத்துக்கணிப்பில்

நரேந்திர மோடியை 55 சதவிகிதம் பேரும் ராகுல் காந்தியை 18 சதவிகிதம் பேரும் தேர்வு செய்து உள்ளார்கள். மன்மோகன் சிங்கிற்கு ஆதரவாக 39 சதவிகிதம் பேரும் சுஷ்மா ஸ்வராஜிற்கு 2 சதவிகிதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

0 comments:

Post a Comment