Monday, 11 November 2013

லோனில் கார் வாங்குவோர் கவனத்திற்கு...

கார் வாங்குவது பலருக்கு பெரிய முதலீடாகவே இருக்கிறது. எனவே, கார் வாங்கும்போது கடன் வாங்குவதும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. மேலும், திடீரென பெரிய முதலீட்டை கையிலிருந்து செய்வதையும் தவிர்த்துக்கொள்ள முடிகிறது.

பல முன்னணி வஙகிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் மற்றும் கார் தயாரிக்கும் நிறுவனங்களே கார் கடன்களை எளிய தவணை முறையில் வழங்குகின்றன. இருப்பினும், கார் கடன் வாங்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். ஏனெனில், சில நிறுவனங்கள் நேர்முக கட்டணங்களை தவிர முடிந்தவரை மறைமுக கட்டணங்களையும் தலையில் கட்டி தாளித்து விடும்.

கார் கடனை கட்டி முடிக்கும்போது காரின் விலையை காட்டிலும் இருமடங்கு தொகையை செலுத்த வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுவிடலாம். எனவே, கார் கடனை தேர்வு செய்யும்போது அதி்க கவனமாக இருக்கவேண்டும். கார் கடன் தேர்வு செய்யும்போது சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தால் ஓரளவு மறைமுக கட்டடணங்கள் மற்றும் ரேட் ஆப் இன்ட்ரஸ்ட் என்று கூறப்படும் அதிக வட்டி வீதங்களிலிருந்து தப்பிக்க முடியும்.

1.காரை தேர்வு செய்தவுடன் ஷோரூம் சூப்பர்வைசர் கையை நீட்டும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் பிரதிநிதி சடசடவென திட்டத்தை பற்றி கூறும் விபரங்களை கேட்டு தலையாட்டிவிடாதீர்கள். கார் வாங்கும் ஆசையில் கண்ணை மூடிக்கொண்டு கடன் பள்ளத்தாக்கில் போய் விழுந்துவிட வேண்டாம். ஒவ்வொரு வினாடியும் யோசித்து நிதானமாக செயல்படுங்கள்.

2. காருக்கு கடன் கொடுக்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கார் கடன் திட்டங்களை பற்றிய விபரங்களை கேட்டுக்கொள்வதோடு, அதன் விபரங்களை வீட்டிற்கு சென்று நன்கு அலசி ஆராய்ந்து பாருங்கள். எந்த வங்கி குறைந்த வட்டி வீதத்தில் கடன் கொடுக்கிறது; கார் கடனுக்கான பிராசஸிங் கட்டணம் எத்தனை சதவீதம் உள்ளிட்ட விபரங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இதில், எது சிறந்தது என்பதை முதலில் முடிவு செய்துகொள்ளுங்கள்.

3.காருக்கு கடன் வாங்க தீர்மானித்துவிட்டால், குறைந்தது 30 சதவீதத்திற்கு மேலாவது முன்பணத்தை செலுத்த வேண்டும். இதனால், மாதத்தவணை தொகை மற்றும் தவணை காலம் வெகுவாக குறைவதோடு வட்டி வீதத்தை குறைத்துக்கொள்ளுமாறு பேரம் பேச முடியும்.

4.கார் கடன் வழங்கும் வங்கிகளின் சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை நன்கு அறிந்துகொண்டு ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும். தவிர, மறைமுக கட்டணங்கள் ஏதாவது திணிக்கப்படுகிறதா என்பதை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பார்க்கவேண்டிய நேரம் இது.

5.கார் கடனுக்கு காப்பீடு திட்டங்கள் இருக்கிறது. காருக்கு ஏதாவது சேதாரம் ஏற்பட்டால் கூட காப்பீடு மூலம் தவணை மற்றும் இழப்புகளிலிருந்து தப்பிக்க முடியும்.

6.இவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமானது. கடன் வாங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் அலுவலக விபரங்கள் மற்றும் போன் நம்பர்களை விற்பனை பிரதிநிதியிடம் அவசியம் கேட்டு டைரியில் குறி்த்து வையுங்கள். கடன் முடிந்த பிறகு ஆர்சி புக் அல்லது ஆர்சிபுக்கில் உள்ள ஹைப்போதிகேஷனை நீக்குவதற்கு நோ அப்ஜெக்சன் சான்றிதழை(என்ஓசி) கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெறும்போது இவை உதவியாக இருக்கும்.

மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை கவனத்தில்கொண்டால், கார் கடன் நம் கழுத்தை இறுக்காது என்று உறுதியாக கூறலாம்..

0 comments:

Post a Comment