Monday, 11 November 2013

அரசிடம் முனைப்பும், பொதுமக்களிடம் பொறுப்புணர்வும் இருந்தால் போதும் குப்பையும் காசாகும்!

 

இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியாவின் நகரவாசிகள் தொகை 600 கோடியாகவும் அவர்கள் ஒரு நாளில் கழிக்கும் குப்பை ஆறு லட்சம் டன்னாகவும் உயரும் என ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. நகரங்களில் நிலத்தின் விலை வானளாவ உயர்ந்து விட்டது. நகராட்சிகளுக்குக் குப்பை கொட்ட இடம் கிடைக்கவில்லை. அடுத்த ஊரில் கொண்டு போய்க் கொட்ட நினைத்தால் அந்த ஊர்க்காரர்கள் ஒன்றுகூடிச் சண்டைக்கு வருகிறார்கள். மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் வேறு அவ்வப்போது ஏதாவது குறை சொல்லிக் கொண்டேயிருக்கின்றன. இதன் காரணமாகப் பல நகராட்சிகள் தம்மூரிலுள்ள குப்பைக் கிடங்குகளில் குப்பை பொறுக்குவோரைத் தாராளமாக நடமாட விட்டு அவர்கள் திரட்டியது போக மிச்சமுள்ளதை எரித்துவிட மறைமுக ஆதரவளிப்பதைப்போலத் தோன்றுகிறது. உலகின் பெரும்பாலான ஊர்களிலும் இதே கதைதான்.


÷சில நகரங்களில் குப்பையிலிருந்து மக்காத பொருட்களைச் சலித்து நீக்கிவிட்டு, மீதமுள்ள கரிமப் பொருளை உலர வைத்துக் கட்டிகளாக்கித் தொழிற்சாலைகளிலும் மின் உற்பத்தி நிலையங்களிலும் எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள். மத்திய அரசு இம்முறையில் சுற்றுச்சூழலைக் கெடுக்காமல் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்குக் கூடுதல் விலை தர முன் வந்திருக்கிறது. பசுங்குடில் வாயுக்களை வெளியிடாமல் மின் உற்பத்தி செய்வோருக்கு கார்பன் பற்று-வரவு மூலமும் பணம் கிடைக்கும். தில்லியில் ஒரு தனியார் நிறுவனம் எட்டுக்கும் மேற்பட்ட குப்பை மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ முன் வந்திருக்கிறது. அதற்கு மத்திய அரசின் காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை அனுமதி அளித்திருக்கிறது.

÷ஆனால் இவற்றின் காரணமாகப் பல லட்சம் குப்பை பொறுக்குவோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. குப்பைகளை எரிக்கிறபோது புகைக் கூண்டுகளிலிருந்து வெளிப்படும் புகைத் துகள்கள் நுரையீரல் நோய்களை உண்டாக்கும். அவற்றுடன் வெளிப்படும் டயாக்சின்கள், ஃப்யூரான்கள், நைட்ரஜன் ஆக்சைடுகள், கந்தக ஆக்சைடுகள் ஆகியவை உடலுக்கு ஊறு விளைவிப்பவை. டயாக்சின் குழுவில் நூற்றுக்கும் மேற்பட்ட வேதிகள் உண்டு. அவை மிக நீண்ட ஆயுள் கொண்டவை. அவை நீரில் கரையா. அவை தரையிலும் நீரிலும் படிந்து தாவரங்களால் முழுமையாக உட் கவரப்படும். அத் தாவரங்களை உண்டு வாழும் மீன்கள் மற்றும் விலங்குகளின் மாமிசம், முட்டை, பால் போன்றவற்றின் மூலம் மனித உடலில் அந்த நச்சுகள் புகுகின்றன. அவை உடலில் வளர்சிதை மாற்றமடைவதில்லை. அவை மல-ஜலமாக வெளியேற்றப்படுவதுமில்லை.

பெண்கள் தமது உடலில் சேரும் டயாக்சின்களைக் கருப்பை மூலமாகவும் தாய்ப்பால் மூலமாகவும் சிசுக்களின் உடலுக்குள் செலுத்துகின்றனர். உடலில் அவை அதிக அளவில் சேரும்போது கல்லீரல் செயல்பாடும் நோயெதிர்ப்புத் திறனும் இனப்பெருக்கத் திறனும் குலையும். குப்பை எரிப்பு நிலையங்களில் எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தாலும் அவை காற்றிலும் மண்ணிலும் கலப்பதைத் தடுக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

குப்பைகளைப் பாதுகாப்பாக அழிப்பதற்கும் அவற்றிலிருந்து பொருளாதார லாபங்களை அடைவதற்கும் “வாயுவாக்கல்’ என்ற தொழில்நுட்பம் மிகச் சிறப்பானது; கரிமப் பொருட்களைக் குறைந்த ஆக்சிஜனுள்ள சூழலில் எரிக்கிறபோது அவை முழுமையாக எரியாமல் கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் ஆகியவற்றை வெளியிடும். அந்தக் கலவை எரியன் வாயு எனப்படும். அதைப் பயன்படுத்தி மின் உற்பத்திக் கருவிகளை இயக்கவும் விமானம், ரயில், பஸ், கார் போன்ற ஊர்திகளை ஓட்டவும், டை மெதில் ஈதர், சமையல் எரிவாயு போன்ற எரியன்களை உற்பத்தி செய்யவும் முடியும். “வாயுவாக்கல்’ 1,000 முதல் 3,000 செல்சியஸ் டிகிரி வெப்ப நிலையில் நிகழ்வதால் டையாக்சின், ஃப்யூரான் போன்ற வாயுக்கள் சிதைந்து சாதாரண மூலக்கூறுகளாக மாறிவிடும். உலகின் முன்னணி விமான நிறுவனங்கள் தமது எரியன் செலவைக் குறைப்பதற்காக “வாயுவாக்கல்’ முறையில் விமான எரிபொருளை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகளில் முதலீடு செய்து வருகின்றன. நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் உற்பத்தியாகப் போகிற ஆறு லட்சம் டன் குப்பையிலிருந்து ஆண்டுக்கு 35 மில்லியன் டன்கள் என்ற அளவில் ஊர்திகளுக்கான எரியன்களை உற்பத்தி செய்ய முடியும். அதன்மூலம் நம் நாட்டுக்கு மிகப் பெரிய அளவில் அன்னியச் செலாவணி மிச்சமாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பின் பெட்ரோலுக்கும் டீசலுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டபோது பஸ்களிலும் லாரிகளிலும் விறகு, கரி ஆகியவற்றை எரித்து எரியன் வாயுவை உண்டாக்கும் “வாயுவாக்கிகள்’ பொருத்தப்பட்டன.

மக்கள்தான் குப்பைகளை உண்டாக்குகிறார்கள். ஆனால் அதைக் காணவே அவர்களுக்குப் பிடிப்பதில்லை. ஆகவே தம் வீட்டுக் குப்பைகளை அருகிலுள்ள காலி மனைகளில் கொட்டி விட்டு நிம்மதியடைகிறார்கள்! சுகாதாரப் பணியாளர்கள் தெருவிலோ காலி மனைகளிலோ ஏரி அல்லது குளக்கரைகளிலோ தென்படும் குப்பைக் குவியல்களைக் கண்டும் காணாமல் போய் விடுகிறார்கள். நகராட்சிகளுக்குக் குப்பைகளைத் திரட்டுவதும் அவற்றைக் கிடங்குகளுக்குக் கொண்டு சேர்ப்பதும் உழைப்பும் செலவும் அதிகமாகத் தேவைப்படுகிற பணிகளாயிருக்கின்றன. வீடுகளிலேயே மக்குகிற குப்பைகளையும் மக்காத குப்பைகளையும் தனித்தனியாகப் பிரித்துத் தருமாறு மக்களுக்கு விடுக்கப்படும் வேண்டுகோள்கள் பயனற்றுப் போகின்றன. மருத்துவமனைகளே கூட கிருமிகள் நிறைந்த குப்பைகளைத் தெருவில் வீசி விடுகின்றன.

குப்பைகளை ஜீரணிப்பது, நொதிக்க வைப்பது, வாயுவாக்குவது ஆகிய முறைகள் மூலம் எரிவாயுக்களை உற்பத்தி செய்யலாம். தாவரக் குப்பைகளைக் குறைந்த அளவில் ஆக்சிஜனைச் செலுத்திச் சூடாக்கினால் குறைந்த எரி திறனுள்ள “எரியன் வாயு’ கிடைக்கும். அவற்றை உயர் வெப்பநிலையிலும் உயர் அழுத்தத்திலுமுள்ள நீராவியையும் ஆக்சிஜனையும் செலுத்திச் சூடாக்கினால் நடுத்தரமான எரி திறனுள்ள எரிவாயு கிடைக்கும். அதை நேரடியாக எரியனாகப் பயன்படுத்தலாம் அல்லது அதிலிருந்து எத்தனால், மெத்தனால் போன்ற திரவ எரியன்களை உற்பத்தி செய்யலாம். அதை உயர் எரி திறனுள்ள மீத்தேனாகவும் ஹைட்ரஜனாகவும் மாற்றி விடலாம். தாவரக் குப்பைகளில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை மெத்தனாலாக மாற்ற முடியும்.

÷மரக் குப்பைகளைத் தூளாக்கி அவற்றின் ஊடாக உயர் அழுத்தத்திலும் வெப்பநிலையிலும் உள்ள ஹைட்ரஜன் வாயுவைச் செலுத்தி நேரடியாக மீத்தேனை உற்பத்தி செய்யலாம். அந்தக் கொதிகலத்திற்குள் நீராவியைச் செலுத்தினால் அது கார்பன் மோனாக்சைடாகவும் ஹைட்ரஜனாகவும் மாறும். மீத்தேனை மெத்தனாலாக மாற்றுவதற்குச் சிறப்பான தொழில்நுட்பங்களும் எந்திரங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

÷நூறு முதல் 400 செல்சியஸ் டிகிரி வரையான வெப்பநிலைகளில், நூறு மடங்கான வளியழுத்தத்தில் தாவர செல்லுலோஸ் குப்பைகளில் செலுத்தப்படும். நீராவியும் கார்பன் மோனாக்சைடும் அடர்த்தி மிக்க எண்ணெய்களை வெளிப்படுத்தும். அவற்றைச் சுத்திகரித்து டீசலை ஒத்த எரியன்களை உற்பத்தி செய்யலாம். கால்நடைத் தீவனமாகவும் எரிபொருளாகவும் பயன்படும் வைக்கோலில் கிட்டத்தட்ட 70 சதவீதம் செல்லுலோஸ்தான்.

÷தாவரக் குப்பைகளைக் காற்றுப்படாமல் சூடாக்கும்போது ஹைட்ரஜன், நைட்ரஜன், கார்பன் மோனாக்சைடு, கரியமில வாயு, ஈத்தேன், மீத்தேன், எத்திலீன், டாலுயின் போன்ற மதிப்புமிக்க வேதிகள் வெளியாகின்றன. ஹைட்ரஜன், கார்பன் மோனாக்சைடு ஆகியவற்றை இணைத்து மெத்தனால், பெட்ரோல், டீசல், அம்மோனியா, மருந்துகள், பசைகள், செயற்கை இழைகள் போன்ற பல உபயோகமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. காற்றுப்படாமல் சூடாக்கும் முறை “தீயாற் பகுப்பு’ எனப்படும். எளிய சாதனங்கள், எளிய செயல்முறை, குறைவான கழிவு ஆகியவை இம்முறையின் சிறப்புகளாகும்.

÷சரியான முறையில் மேலாண்மை செய்யப்பட்டால் குப்பையும் செல்வம் தரும். அதற்குப் புதிய கண்டுபிடிப்புகளோ, புதிய வடிவமைப்புகளோ புதுவகை எந்திர சாதனங்களோ தேவையில்லை. அரசிடம் முனைப்பும், அதிகாரிகளிடம் அக்கறையும் பொதுமக்களிடம் பொறுப்புணர்வும் இருந்தால் போதும். குப்பையும் காசாகும்!

0 comments:

Post a Comment