Friday, 15 November 2013

பழைய தங்கத்தை விற்றால் நஷ்டமே!

மூன்று ஆண்டுகளுக்கு தங்கம் வாங்காதீர்கள் என மத்திய நிதி அமைச்சர் வேண்டுகோள் விடுப்பது ஒருபக்கமிருக்க, உங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளை தந்து சுத்தமான தங்கமாக மாற்றிக்கொள்ளுங்கள் என விளம்பரம் செய்யத் தொடங்கி இருக்கின்றன நகைக் கடைகள். இதற்கு போனஸும் கிடைக்கும் என்பது எக்ஸ்ட்ரா கவர்ச்சி. நகைக் கடைகள் பழைய தங்கத்தை வாங்குவதற்கு என்ன காரணம்? ஏன் போனஸ் தருகிறது? இதனால் மக்களுக்கு லாபமா, நஷ்டமா?

''நாம் அளவுக்கதிகமாக தங்கம் இறக்குமதி செய்ததால், நம் கையிருப்பில் இருந்த அந்நிய செலாவணி பெரிய அளவில் குறைந்தது. இதனால் நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் ஏகத்துக்கு உயர்ந்தது. இதைத் தடுக்கும்விதமாக தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அதிக கட்டுப்பாடுகளை விதித்தது. 2 சதவிகிதமாக இருந்த இறக்குமதி வரியானது, கடந்த 18 மாதங்களில் 8 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யும் தங்கத்திற்கான மார்ஜின் தொகை முழுவதையும் செலுத்தினால்தான் தங்கத்தை வாங்கமுடியும் என வங்கிகளும் கட்டுப்பாடு விதித்தன. முழுத் தொகையும் செலுத்த அதிகமான பணம் தேவை. இதனால் நகைக் கடைகள் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளன. இதன் விளைவாக நகைக் கடைகள் தங்கம் இறக்குமதி செய்யும் அளவை வெகுவாக குறைத்துக்கொண்டுள்ளன.

கடந்த மே மாதத்தில் 162 டன் இருந்த தங்கத்தின் இறக்குமதி ஜூன் மாதத்தில் 38 டன்னாக- குறைந்தது. தங்கத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் நகைக் கடைகள் தேவையான தங்கத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கத் திட்டமிட்டன. இதற்கு காரணம், இந்திய வீடுகளில் மட்டும் கிட்டத்தட்ட 20 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக வேர்ல்டு கோல்டு கவுன்சில் கடந்த ஆண்டு அறிவித்தது. இந்தத் தங்கத்தில் 10 சதவிகித தங்கத்தை வாடிக்கையாளர்களிடமிருந்து வாங்கினால்கூட போதும் என நகைக் கடைகள் நினைக்கின்றன.

இதனால் பழைய தங்கத்தை சுத்தமான 916 தங்கமாக மாற்றிக் கொள்ளுங்கள். அதோடு பழைய தங்கத்திற்கு போனஸும் தருகிறோம் என்று விளம்பரம் செய்கின்றன. இப்படி போனஸ் தருவதால் வாடிக்கையாளர்களுக்கு லாபம் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அதில் உண்மை இல்லை.

பழைய தங்கத்தை விற்கும்போது நகைக் கடைகள் குறிப்பிட்ட சதவிகிதத்தைக் கழித்துவிடுகின்றன. இதனால் பழைய தங்கத்தை அன்றைய விலையில் எடுத்துக்கொண்டால்கூட உங்களிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பில் ஒரு சில சதவிகிதத்தைக் குறைத்துதான் மதிப்பீடு செய்வார்கள். இப்படி கழிக்கப்படும் தங்கத்தின் மதிப்பு என்பது உங்களுக்கு கொடுக்கும் போனஸ் தொகை மதிப்பைவிட அதிகமாக இருக்கும். நகைக் கடைகள் அதிகபட்சம் ஒரு கிராமிற்கு 100 ரூபாய் போனஸ் தரும். ஆனால், ஒரு கிராமிற்கு 250 ரூபாய் வரை  நகைக் கடைகள் லாபம் பார்க்க முடியும். நகைக் கடைகள் இப்படி செய்வதன் மூலம்  கடைகளில் இருக்கும் நகைகளும் குறையும். இதனால் வியாபாரமும் நடக்கும்.

மேலும், தங்க இறக்குமதியைக் குறைக்க தங்க காயின்கள், பார்கள் விற்கக் கூடாது என அரசாங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனாலும் நகைக் கடைகளுக்குதான் லாபம். ஏனெனில் காயின், பார்கள் விற்கும்போது குறைந்த அளவில்தான் சேதாரம் வசூலிக்க முடியும். இப்போது தங்கம் வாங்க நினைப்பவர்கள் ஆபரணமாகவே வாங்கும் கட்டாயத்தில் இருப்பதால் நகைக் கடைகளுக்கு லாபம்தான்.

சில நகைக் கடைகள் கள்ளச் சந்தையில் தங்கத்தை வாங்கு கின்றன. இப்படி வாங்கும் தங்கம் கணக்கில் வராது என்பதால் வரி எதுவும் கட்டுவதில்லை. இதனை கணக்கில்கொண்டு வருவதற்கும் பழைய தங்கத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கத் திட்டமிடுகிறார்கள்.

இப்போதுள்ள சூழ்நிலையில், உங்களுக்கு தேவை இருந்தால் மட்டுமே பழைய தங்கத்தை விற்று புதிய தங்க நகைகளாக மாற்றிக்கொள்ளுங்கள். கல் வைத்த நகைகளை மாற்றும்போது வாடிக்கையாளர்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படவே செய்யும். முடிந்தவரை ஏற்கெனவே நகை வாங்கிய கடைகளிலே திரும்பத் தந்து, புதிய தங்கமாக மாற்ற முயற்சி செய்யுங்கள்'' என்றார்.

0 comments:

Post a Comment