Saturday, 14 December 2013

பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- Part 1





பெண்களைப் பற்றிய பழமொழிகள் பெரும்பாலும் அவர்களுக்கு எதிரானதாகவும், அவர்களைக் குறைகூறுவதாகவும் இருக்கின்றன. இதைக் காலத்தின் பிரதிபலிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். பல கலாசாரங்களிலும் பழங்காலத்தில் இப்படிதான் இருந்தது. வேற்று மொழிப் பழமொழிகள், பொன்மொழிகளைப் பயிலுவோருக்கு இது தெளிவாக விளங்கும்.


சில தமிழ்ப் பழமொழிகள் கடுமையான மொழியில் இருக்கும். வாசகர்கள் என்னை மன்னிப்பார்களாக. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருப்பதைத்தான் நான் மீண்டும் கொடுக்கிறேன். மிகவும் கடுமையான, பாலியல் தொடர்பான பழமொழிகளையும், படிப்பதற்கு நாராசமாக உள்ள பழமொழிகளையும் கூடுமான அளவுக்கு தவிர்த்துவிட்டேன்.


பெண் பல ரூபங்களில் இருப்பவள். தாயாகவும் மனைவியாகவும், மகளாகவும்,மருமகளாகவும், மாமியாரகவும், மாமியாகவும், அத்தை/சித்தியாகவும், மிக அபூர்வமாக வேசியாகவும் வருகிறாள். பெண்களைப் பற்றிய சுமார் 300 பழமொழிகளை மூன்று பகுதிகளாகத் தருகிறேன். இவைகளை ஆராய்ச்சிப் படிப்பாக எடுப்பவர்களுக்கு இது பயன் தரும். நேரம் கிடைக்கும்போது வேற்று மொழிப் பழமொழிகளுடன் ஒப்பிட்டும் காட்டுவேன்.


முதல் பகுதி


குடியில் பிறந்த பெண் வயிற்றெரிந்தால் கொடியில் உள்ள துணி எரியும்
நார்த்தங்காய்க்குப் போடுகிற உப்பும், நாத்தனாருக்குப் போடுகிற சாதமும் வீண்போகாது
தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறுதான்
மழை வருவதும், பிள்ளை பெறுவதும் மகாதேவனுக்கே தெரியாது
ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே
பெண் என்றால் பேயும் இரங்கும்
பெண் புத்தி பின் புத்தி
ஐந்து பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டியாவான்
பணம் படைத்த சீமாட்டி எஸ் கொண்டையும் போடுவாள் ஒய் கொண்டையும் போடுவாள்
ஆடத்தெரியாத பெண் தெருக்கோணல் என்றாளாம் (கூடம் போதாது என்றாளாம்) 10


அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டாளாம்
அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்றானாம்
அரச மரத்தைச்சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்
ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியதாம்
ஒத்த கணவனும் ஒரு சிறு நெல்லும் இருந்தால் சித்திரம் போல் குடித்தனம் செய்வேன் என்றாளாம்
ஓடுகாலி வீடு மறந்தாளாம்
பெண்ணைக் கொடுத்தாயோ கண்ணைக் கொடுத்தாயோ என்பார்கள்
பெண் கொடுத்த மாமியோ கண் கொடுத்த சாமியோ !
ஒய்யாரக் கொண்டையாம் தலக்குள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்
தாயா ? பேயா ?
பேய்க்கு வாக்குப்பட்டால் புளியமரத்தில் ஏறித்தான் ஆகவேண்டும்
பேயானாலும் தாய் (20)


பெற்றவளுக்கு பிள்ளை பாரமா?
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா
தாயில் சிறந்ததொரு கோயில் இல்லை
தாய்க்குப் பின் தான் தாரம்
பொம்பளை (பெண்) சிரிச்சா போச்சு பருத்தி விரிச்சா போச்சு
குனிந்து சேவித்து நிமிர்ந்து வாழ்த்திக் கொண்டாளாம்
அத்தை பகையில்லை அம்மாள் உறவில்லை
குறத்தி பிள்ளை பெற்றாளாம் குறவன் மருந்து சாப்பிட்டானாம்
மகள் பிறக்கும் முன் பூட்டிக்கோ, மருமகள் வருவதற்கு முன் சாப்பிட்டுக்கோ
இடுப்பில் குழந்தையை வைத்துக்கொண்டு ஊர் முழுவதும் தேடினாளாம்
கொடுக்காத மகராசி இருக்கவே இருக்கிறாள் கொடுக்கிற மூதேவி கொடுப்பதற்கு என்ன என்றாளாம்
மனம் காவலா மதி காவலா ?(பெண்ணுக்கு)
மருமகளுக்கு தீவளிக்கு தீவளி எண்ணை தேய்ப்பேன், மகளுக்கு வெள்ளியோடு வெள்ளிதான் தேய்ப்பேன் என்றாளாம்
ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு பிள்ளையும் வேண்டும் என்பார்கள்


மகளே உன் சமத்து


மகளுக்கு குடல் பாக்கியம் தவிர மற்ற பாக்கியம் எல்லாம் இருக்கின்றன
மகளுக்கு புத்தி சொல்லித் தாய் அவசாரி போனாளாம்
மகளே வல்லாண்மை
மகள் செத்தாள் தாய் திக்கற்றாள்
மகள் செத்தால் பிணம், மகன் செத்தால் சவம்
மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் கொட்டம் அடங்கினால் போதும்
மகாரசன் பெண்சாதி மர்மக்காரி,, யாருடன் சொன்னாலும் திறமைக்காரி
மகாலெட்சுமி பரதேசம் போனாற்போல
மகிமை சுந்தரி கதவை ஒஞ்சரி
மகிமையிலே ஒரு பெண் குவளையிலே வாழுகிறாள், அதில் ஒரு பெண் அறுத்துவிட்டு அழுகிறாள்
மங்கை தீட்டானால் கங்கையிலே முழுகுவாள், கங்கை தீட்டானால் எங்கே முழுகுவாள்?
மங்கை நல்லாள் பெண் பெருமாள், வாழ்ந்ததெல்லாம் எத்தனை நாள், திங்கள் ஒருபொழுது செவ்வாய் பகலறுதி
மச்சத்தின் குஞ்சுவுக்கு இப்படி என்றால் மாதாவுக்கு எப்படியோ?
மஞ்சள் குளித்து மணை மேலே இருக்கும்போது மட்டேன் என்றீரே, பிள்ளை பெற்று நொந்திருக்கச்சே வேண்ட வந்தீரே
மடிப் பிச்சை மாங்கலியப் பிச்சை
போனதினம் போகப் புதனன்றைக்கு வந்தாள்
அடைமழைக்குக் குடை இல்லாதவனுக்கு ஐந்து பெண்டாட்டியாம் (50)
அட்டிகைக்கு ஆசைப்பட்டு எருமைச் சங்கிலியைக் கட்டிக் கொண்டாளாம்
அண்டை வீட்டுக்காரி பிள்ளை பெற்றாள் என்று அயல் வீட்டுக்காரி இடித்துக் கொண்டது போல
அண்டை வீட்டுச் சுப்பிக்கும் எதிர் வீட்டுக் காமாட்சிக்குமா கவலை?
உதறுகாலி முண்டை உதறிப் போட்டாள்
உதறுகாலி வந்தாள், உள்ளதும் கெடுத்தாள்
ஏண்டி பெண்ணே, இளைத்தாய் குதிர் போல
ஏண்டி பெண்ணே குந்தியிருக்கிறாய்? சோறு பற்றாமல்
ஏண்டி பெண்ணே சோர்ந்திருக்கிறாய்? சோறு பத்தியம்
ஏண்டி சிறுக்கி புல்லு ஆச்சா? ஒரு நொடிக்கு முன் கட்டாச்சே
ஏய்த்தால் மதனியை ஏய்ப்பேன், இல்லாவிடால் பரதேசம் போவேன்
மயிர் உள்ள சீமாட்டி வாரி முடிக்கிறாள்
மயிற்கண்ணிக்கு மசக்கை, மாப்பிள்ளைக்கு அவத்தை
மரியாள் குடித்தனம் சரியாய் போச்சு


மருமகள்-மாமியார் மோதல்


மருமகளுக்கு மாமியார் பிசாசு; மாமியாருக்கு மருமகள் பிசாசு
மருமகனுக்கென்று சமைத்ததை மகனுக்கு இட்டு வயிறு எரிந்தாளாம்
மலைபோல பிராமணன் போகிறான், பின்குடுமிக்கு அழுதாளாம்
மலை விழுங்கின மாணிக்கத்தாளுக்குக் கதவு சுண்டரங்கி
மறு மங்கையர்க்கும், மறு மன்னவர்க்கும், மார்பும் முதுகும் கொடாமலிரு
மாதா ஊட்டாத அன்னம் மாங்காய் ஊட்டும்
மாதா செய்தது மக்களுக்கு (மக்களைக் காக்கும்) 70
மாதா மனம் எரிய வாழான் ஒரு நாளும்
மாதவுக்குச் சுகம் இருந்தால் கர்ப்பத்துக்கும் சுகம்
மாமி மெச்சிய மருமகள் இல்லை
மாமி ஒட்டினாலும் பானை ஒட்டாது
மாமியாருக்கு கண் மண்டை பிதுங்கிப் போகிறது
மாமியாருக்கு சுவாமியார் இவள்
மாமியாருக்கும் மாமியார் வேண்டும்
மாமியாரும் ஒரு வீட்டு நாட்டுப் பெண்

மாமியாரும் சாகாளோ, மனக்கவலை தீராதோ
மாமியாரைக் கண்டு மருமகன் நாணுவதைப் போல
மாமியாரோடு போகாத மாபாதகன்
மாமியார் இல்லாத மருமகள் உத்தமி, மருமகள் இல்லாத மாமியார் குணவதி
மாமியார் துணி அவிழ்ந்தால் வாயாலும் சொல்லக் கூடாது, கையாலும் காட்டக்கூடாது
மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்
மாமியார் கை வெல்லத்தைப் பார்க்கிலும் மருமகள் கைத்தவிடு தேவலை
மாமியார் செத்த ஆறாம் நாள் மருமகள் கண்ணில் தண்ணீர் வந்ததாம்
மாமியார் செத்த ஆறாம் மாதம் மருமகள் கண்ணில் தண்ணீர் வந்ததாம்
மாமியார் செத்து மருமகள் அழுகிறது போல
மாமியார் செய்த காரியங்களுக்கு நிந்தை கிடையாது
மாமியார் தலையில கையும் வேலிப் புறத்துல கண்ணும் (90)
மாமியார் தலையில கையும் மாப்பிள்ளை மேல் சிந்தையும்
மாமியார் நன்மையும் வேம்பு இனிப்பும் இல்லை
மாமியார் மெச்சின மருமகள் இல்லை, மருமகள் மெச்சிய மாமியார் இல்லை
மாமியார் வீடு மகா சவுக்கியம்
மாம்பழத்தில் இருக்கும் வண்டே ! மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை


மதனி/ மைத்துனி


மாலை இட்ட பெண்சாதி காலனை (எமனை)ப் போல வந்தாள்
மாலை சுற்றிப் பெண் பிறந்தால் மாமனுக்கு ஆகாது
மாற்றானை நம்பினாலும் மாதரை நம்பொண்ணாது (100)
மேய்த்தால் மதனியை மேய்ப்பேன்
மேய்த்தால் மைத்துனியை மேய்ப்பேன், இல்லாவிட்டால் பரதேசம் போவேன்.....

0 comments:

Post a Comment