Monday, 9 December 2013

கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு!







கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வான நீர்த்தாரை எனப்படும் ‘டோர்னடோ'வை தனது செல்போன் உதவியுடன் புகைப்படம் எடுத்துள்ளார் தமிழக மீனவர் ஒருவர்.


கடலூர் சிங்காரத்தோப்பைச் சேர்ந்த மீனவர்களான மதியழகனும் அவரது தம்பியும் மரக்காணம் அருகே ஆலம்பாறை என்ற இடத்தில் இருந்து கடலுக்குள் 5 கிலோ மீட்டர் தொலைவில் பெரிய விசைப்படகில் தங்கியிருந்து மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர்.


அப்போது, திடீரென மேகங்கள் வானில் இருந்து தாழ்வாக கடல் அருகே இறங்கியும், கடல் நீர் சுழல் போல் மேலெழுந்து மேகங்களுக்குள் இழுக்கப்படும் அதிசய காட்சியை அவர்கள் கண்டுள்ளனர்.


சுமார் அரை மணிநேரம் நீடித்த இந்த அதிசய நிகழ்வை உடனடியாக தனது செல்போனில் படம் எடுத்துள்ளார் மதியழகன். மதியழகனின் படகிற்கு மிக அருகில் இந்த நிகழ்வு நடந்ததாக தெரிவித்துள்ளார் அவர்.


மீனவர்கள் மொழியில் இந்த நிகழ்வை ‘யானை தும்பிக்கையை இறக்கி இருக்கிறது' எனச் சொல்வார்களாம்.ஆனால், அறிவியல் மொழியில் இதனை ‘டோர்னடோ' என பெயரிட்டு அழைக்கிறார்கள். அதாவது தமிழில் நீர்த்தாரை.


மீனவர்கள் கண்ட இந்த டோர்னடோ குறித்து, கடலூர் துறைமுக அதிகாரி கேப்டன் அன்பரசன் கூறுகையில், ‘கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடலின் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் நீர்த்தாரைகள் எனப்படும் அதிசய நிகழ்வு ஏற்படும்.


பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்படும் போது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும். மீண்டும் இரண்டு காற்றுகளின் வெப்பநிலையும் சமமாக மாறும் போது, நீர்த்தாரைகள் மறைந்து விடும். இந்த விநோத நிகழ்வின் போது கடலின் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறி விடும். இதன் வேகம் பல கிலோ மீட்டராக இருக்கும்.


இதற்கு ஆங்கிலத்தில் "டோர்னடோ" என்று பெயர். இவைகள் ஐரோப்பா போன்ற பகுதிகளில் அதிகம் காணப்படும். இவை அனைத்தும் பருவகாலம் மாறும் போது நடைபெறும் நிகழ்வுகள்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment