Monday, 9 December 2013

இன்பம் எங்கே?


இன்பமாக வாழவே எல்லாரும் விரும்புகின்றனர். இன்பத்தில் மட்டுமே திளைத்தவர் என்று யாரும் இருக்க முடியாது. அதே போல் துன்பத்திலேயே துவண்டு போனவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. எனவே இன்பத்தின் முடிவில் துன்பமும், துன்பத்தின் எல்லையின் இன்பமும் இருக்கும். இரவு, பகல், மேடு, பள்ளம், உயர்வு தாழ்வு, மேல், கீழ் என்று வருகின்ற இணைகள் இவை.


ஒருவருக்கு இன்பம் தரும் பொருள் இன்னொருவருக்குத் துன்பம் தருகிறது. பாகற்காய் பொதுவாகக் கசக்கிறது. ஆனால் சர்க்கரை நோயாளிக்கு "இனிக்கிறது".


ஒருவருக்கு இன்பம் தரும் பொருள் எல்லாருக்கும் இன்பம் தர வேண்டுமல்லவா? விளையாட்டுப் பொம்மை குழந்தைப் பருவத்தில் மகிழ்ச்சியளிக்கிறது. குமரப் பருவத்தில் விளையாட்டுப் பொம்மை மகிழ்ச்சியளிக்குமா? இன்று மகிழ்ச்சியளிக்கும் பொருள்களோ நாளை துன்பம் தரும் சூழலை உருவாக்கிட வாய்ப்பு உண்டு. எனவே இன்பம் உலகியல் பொருள்களில் இல்லை.


சில நேரங்களில் நமக்குத் துன்பம் உண்டாகிறது. நாம் விரும்பிய பொருள் கிட்டவில்லை. உலகியல் ஆசை நிறைவேறவில்லை. துன்பத்தால் மனம் இடிந்து போய் விடுகிறது. உடல் பிணியாலும், பொருள் இன்மையாலும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவராலும் ஒவ்வொரு பிரச்சினை உண்டாகிறது. பிரச்சினை தொடர் கதையாகிறது.


நாம் இன்பம் அடைய நாமே காரணம் என்று மார்தட்டுகிறோம். ஆனால் துன்பம் வந்தால் எதிரே இருப்பவர் தான் காரணம் என்று கருதுகிறோம்.


"தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்றார் சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார். இதனால் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்குப் பிறர் காரணம் அல்லர். நாமே தான் என்று உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே தான் பாரதியார் "துன்பம் நெருங்கி வந்த போதும் - நாம் சோர்ந்து விடலாகாது பாப்பா" என்று எச்சரிக்கை செய்கிறார்.


பிரச்சினைகள் தாம் இன்ப துன்பத்திற்குக் காரணம், பிரச்சினை ஏதும் இல்லாவிட்டால் வாழ்க்கை ஒளிமயமாகும் என்று பலர் கருதுவர். பிரச்சினை யாருக்குத்தான் இல்லை? சிலர் தமக்கு ஏற்பட்ட பிரச்சினையை எண்ணி எண்ணி பயந்து சிறு விவகாரத்தைப் பூதாகரமாக்கி அலைந்து திரிவர்.


எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு உண்டு என அமைதி அடைய வேண்டும். அடுத்தடுத்து வரும் அலைகள் போல் பிரச்சினை வந்து கொண்டேதான் இருக்கும். சில நேரங்களில் தீவிரமாக இருக்கும். பின்னர் அழுத்தம் குறைந்து போகும். நாம் வருந்தும் வரை பிரச்சினையின் தாக்கம் இருக்கும். புயலுக்குப்பின் அமைதி, என்பது போல் பிரச்சினையின் முடிவில் நிறைவு உண்டாகும்.


ஒரு மனிதனுக்கு பகைவன் இன்னொரு மனிதன் மட்டும் அல்லன், பிரச்சினை, பதற்றம், அச்சம், அருவருப்பு, அவநம்பிக்கை போன்ற தீய பண்புகளும் தாம்.


இப்படிப்பட்ட பகைவர்கள் எப்போதும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். தொடர்ந்து நாமும் போரிட்டு இப்பண்புகளை வெற்றி கொள்ள வேண்டும். இச்செயலிலும் உள்ளார்ந்த மகிழ்ச்சி உண்டு. பிரச்சினை இல்லா வாழ்வு சுவைக்காது. இறந்து விட்ட பிணத்திற்குத்தான் பிரச்சினை ஏதும் இல்லை.


நாம் அனுபவிக்கும் இன்பமும், துன்பமும் நமக்கு அனுபவம் என்ற பாடத்தைப் போதிக்கவே வருகின்றன. சிற்பி தேர்ந்தெடுத்த கல்லில் உளியால் செதுக்குகிறான். தேவையான பகுதியைச் செதுக்கி வைத்துத் தேவையில்லாத பகுதியை நீக்குகிறான். சாதாரண கல் சிற்பியின் சிற்றுளி பட்டுச் சிந்தை கவரும் அழகுச் சிலையாய்ப் பரிணமிக்கிறது. எனவே துன்பங்களால் ஒருவன் பட்டை தீட்டப் பட்ட வைரமாய் - பக்குவமாய் பதப்படுகிறான்.


உலகத்தை இன்பமாகவோ துன்பமாகவோ அமைத்துக் கொள்ள மனிதனுடைய மனப்பக்குவம் காரணமாகிறது.


இரண்டிலும் பாதிக்கப்படாத சமநிலை பெற வேண்டும். உலகியல் வாழ்வில் பொதுநல நாட்டம் கொண்டவன் எப்போதும் இன்பத்தில் இருப்பான். சுயநல நோக்கம் கொண்டவன் பெறுவது துன்பமே. நாம் பிறருடன் உறவு ஏற்படுத்தப் பாலம் அமைப்போம். எனவே துன்பத்தைக் கண்டு கலங்காமல் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று இறுமாப்புடன் எதிர் கொள்வோம்.

0 comments:

Post a Comment