Sunday, 15 September 2013

"கர்வம் கூடாது"...................குட்டிக்கதைகள்




ரமேஷ் புத்திசாலி மாணவன்...

அதனால் அவனுக்கு கர்வம் உண்டு...யாருடனும் நட்பு வைத்துக்கொள்ளமாட்டான்..எல்லோரும் அவனை விட அறிவில் மட்டமானவர்கள் என எண்ணம்.

மற்ற மாணவர்கள் அனைவரும் சேர்ந்து எப்படியாவது ரமேஷை ஏதாவது ஒரு பந்தயத்தில் தோற்கடித்து ...வல்லவனுக்கு வல்லவன் பூமியில் உண்டு என நிரூபிக்க வேண்டும் என எண்ணினர்

அப்போது ...அந்தப் பள்ளியில் புதிதாக சேர்ந்த வினோத் என்ற மாணவன் அந்தப் பணியை ஏற்றான்.

அவன் ரமேஷிடம் சென்று 'ரமேஷ் நீ புத்திசாலி ..அதேபோல நானும் உன்னைவிட புத்திசாலி தான்' என்றான்.

கோபமடைந்த ரமேஷ் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் ..'நான் ஒரு கேள்வி கேட்பேன் .உனக்கு விடை தெரியவில்லை எனில் நீ எனக்கு பத்து ரூபாய் தரவேண்டும்.நீ கேட்கும் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை என்றால் நான் நூறு ரூபாய் தருகிறேன்'என்றான்.ஆனால் அந்த கேள்விக்கு உனக்கு விடை தெரியவில்லை என்றால் கூட நீ பத்து ரூபாய் கொடுத்தால் போதும்' என்றான்.

பின் ரமேஷ் கேட்டான்'பூமிக்கும் ..சந்திரனுக்கும் இடையே எவ்வளவு தூரம்'.

வினோதிற்கு பதில் தெரியாததால் பத்து ரூபாயை ரமேஷிற்கு கொடுத்தான்.இப்போது வினோத் கேள்வி கேட்கவேண்டும்.

வினோத் கேட்டான்..

'மலை ஏறும்போது மூன்று கால்களுடன் ஏறி..இறங்கும்போது நான்கு கால்களுடன் இறங்கியது யார்'.

ரமேஷிற்கு விடை தெரியவில்லை.அதனால் ஒப்புக் கொண்டபடி நூறுரூபாயை வினோதிற்கு கொடுத்துவிட்டு ..விடையை நீயே சொல்' என்றான்.

'எனக்கும் தெரியாது'என்ற வினோத் பத்து ரூபாயை நீட்டினான்.அப்போது தான் கூறிய வார்த்தைகளை வைத்தே வினோத் தன்னை வென்றதை உணர்ந்து ரமேஷ் தலை குனிந்தான்.

அவன் கர்வம் மறைந்து அனைவருடனும் நட்பாக பழக ஆரம்பித்தான்.

0 comments:

Post a Comment