Sunday, 15 September 2013

‘தமிழக அரசு பாட்டில் குடிநீர் விற்பனை முயற்சியை கைவிட வேண்டும்!’ – பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை!



“தண்ணீருக்கு விலை வைப்பது என்பது, நம் உயிரை விலை பேசுவது போன்றது. எனவே, தமிழகத்தில் தண்ணீர் விற்பனையை அனைத்து வகைகளிலும் தடை செய்து, தண்ணீர் பொதுச்சொத்து என்று சமூகஉரிமையை நிலைநாட்டி தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும்.”என்று பூவுலகின் நண்பர்கள் குழு கேட்டுக் கொண்டுள்ளது.


இது குறித்து அக்குழு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில்,”மனிதனின் அடிப்படைத் தேவைகளில் தண்ணீரும் முதன்மையானது, உடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது. ஆரோக்கியமான, சுத்தமான தண்ணீர் மழையாய் பொழிந்து, ஆறுகளின் வழியாக காலம்காலமாக நமக்குக் கிடைத்து வருகிறது. வரலாற்றில் நாகரிகங்கள் தோன்றி வளரக் காரணமாக இருந்தது பெரும் நதிகள்தான்.


நம் நாட்டில் எதிரி வீடுகளுக்குச் சென்றாலும்கூட, முதலில் நமக்குக் கொடுத்து உபசரிப்பது ஒரு குவளை தண்ணீர்தான். மேலும், ஒருவரிடம் ஒரு குவளை தண்ணீர் வாங்கிக் குடித்தாலும், அவருக்கு நாம் நன்றிக் கடன் பட்டவர்களாகி விடுகிறோம்.

sep 15 amma mineral water spot

 


காலங்காலமாக தண்ணீர் பந்தல் அமைத்தும், வீட்டின் முன்புறம் மண்பானை வைத்தும் தண்ணீரை இலவசமாக தந்தது நமது பண்பாட்டின் பெருமைமிகு அடையாளம். சுவாசிக்கும் காற்றைப் போல பெரும்பாலான அடிப்படைத் தேவைகள் பொதுச்சொத்தாக, அனைவருக்கும் இலவசமாக கிடைத்து வருவது போலவே தண்ணீரும் கடந்த நூற்றாண்டு வரை இலவசமாகவே கிடைத்து வந்தது. ஆனால், தண்ணீர் இன்றைக்கு விற்பனைப் பண்டமாக மாற்றப்பட்டுவிட்டது.


பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர்தான் பாதுகாப்பாக, சுகாதாரமாக இருக்கும், அதற்கு 20 ரூபாய் கொடுப்பது தப்பில்லை என்றொரு மனப்பான்மை வலிந்து திணிக்கப்பட்டுவிட்டது. ஒரு லிட்டர் தண்ணீரை ஒரு ரூபாய்க்கும் குறைவான காசில் அரசிடம் இருந்து வாங்கி, அதை 10 ரூபாய், 20 ரூபாய் என்று விற்கும் மிகப் பெரிய பகல் கொள்ளை நிகழ்ந்து வருகிறது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல, போக்குவரத்துக் கழகங்கள் மூலமாக தமிழக அரசே பாட்டில் குடிநீரை விரைவில் அறிமுகப்படுத்தப் போகிறது.


கடந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட தேசிய தண்ணீர் வரைவு கொள்கையும் (2012) தண்ணீரை விற்பனைப் பண்டமாக முன்னிறுத்துகிறது. மக்களின் உழைப்பு, அறிவை பயன்படுத்தி நாட்டின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கு நேர்மாறாக, மீண்டும் உருவாக்க முடியாத இயற்கை ஆதாரங்களை கூறுபோட்டு விற்பதையே மத்திய, மாநில அரசுகள் செயல்திட்டமாகக் கொண்டுள்ளன. காற்று, தண்ணீர், காடுகள் போன்ற அனைத்தும் மக்களின் பொதுச் சொத்து, இவற்றை மத்திய, மாநில அரசுகள் விற்பனைப் பண்டமாக்கி விற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக, தண்ணீரை விற்பனைப் பண்டமாக மாற்றுவது மிகப் பெரிய ஆபத்து.


அனைவருக்கும் சுகாதாரமான தண்ணீரை வழங்க வேண்டியது அரசின் கடமை. வீட்டு குடிநீர் இணைப்புக்கு ஏற்கெனவே நாம் பணம் செலுத்தி வருகிறோம். ஆனால், எல்லா நாளும் தண்ணீர் விநியோகிக்கப்படுவதில்லை. அப்படியே விநியோகிக்கப்பட்டாலும், அந்தத் தண்ணீர் தரமானதாக இல்லை.
இதற்குக் காரணம் கழிவுநீரை சுத்திகரிப்பது, கால்வாய்களைக் கட்டி நகர்ப்புற கழிவுநீரை வெளியேற்றுவது போன்ற செயல்களை மேற்கொள்ளாமல் நம் வாழ்வின் ஆதாரமாக இருக்கும் ஆறுகளை மாசுபடுத்தி, சுற்றுச்சூழலும் நீராதாரங்களும் அழிந்து போக அரசே நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக இருப்பதுதான்.


தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னையில் அனுமதி பெறாமல் செயல்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளை சில மாதங்களுக்கு முன் மூடியபோது, தமிழ்நாடு பேக்கேஜ்டு குடிநீர் உற்பத்தியாளர் சங்கம் ஒட்டுமொத்த குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளை 3 நாள்களுக்கு மூடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது. குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளை முறைப்படுத்துவதற்கு எதிராகத்தான், அந்த அமைப்பு செயற்கையான ஒரு குடிநீர் பஞ்சத்தை உருவாக்கி, தன் வலிமையைக் காட்டியது. இதன்மூலம் தெரிய வருவது என்னவென்றால், இவர்கள் நினைத்தால் எதிர்காலத்தில் நமக்குத் தேவையான தினசரி குடிநீரை தடுக்க முடியும், நினைத்த விலையை வைத்து விற்க முடியும், எப்படி வேண்டுமானாலும் நம்மை பிளாக் மெயில் செய்ய முடியும்.


தண்ணீரை விற்பனைப் பண்டமாக்குவதன் மூலம், நிலத்தடி நீர் கண்மண் தெரியாமல் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் சரியும். ஏற்கெனவே, விவசாயம், வீட்டுப் பயன்பாடுகளுக்கு பெருமளவு ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டுவிட்டதால், நிலத்தடி இயற்கை ஊற்றுகள் வற்றி விட்டன, நிலத்தடி நீர்மட்டம் சரிந்துவிட்டது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நம் நாட்டில் பாதிக்கு மேற்பட்ட மக்கள் விவசாயிகள், பெருமளவு மக்கள் ஏழைகள். ஏற்கெனவே பணவீக்கம், விலைவாசி ஏற்றம் போன்றவற்றால் இவர்கள் வாழ்க்கை நடத்துவது கடினமாக உள்ள சூழ்நிலையில், தண்ணீர் போன்ற அடிப்படை தேவையை விற்பனைப் பண்டமாக்கி, காசுக்கு விற்பனை செய்வது அவர்களை கூடுதல் நெருக்கடியிலேயே தள்ளும்.

தண்ணீரை விற்பனைப் பண்டமாக மாற்றுவது என்பது, இது போன்ற வேறு பல பெரும் பிரச்சினைகள் உருவாகக் காரணமாக இருக்கும். எனவே, அதை முதல் நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும்.



ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் குடிநீர் தொட்டியுடன், நீர் சுத்திகரிப்பு கருவியை பொருத்தினாலே போதும், மக்களுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான குடிநீர் கிடைத்துவிடும். இதற்கு பெரும் முதலீடும் தேவையில்லை, பணிச் சுமையும் பெரிதாக இருக்காது.


கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. தண்ணீர் சேகரிப்புக்கு அது போன்ற ஆக்கப்பூர்வமான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து இப்போது யோசிக்கலாம். இயற்கையாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் பெருமளவு தண்ணீரை சேகரித்து பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராயாமல், பன்னாட்டு, உள்நாட்டு வியாபாரிகளுக்கு தண்ணீர் விற்பனையை திறந்து விடுவதால், நமது தண்ணீர் தேவையும் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகின்றன.


இந்த விவகாரத்தில், நாம் கவனம் செலுத்த வேண்டிய முதல் விஷயம் “தண்ணீர் என்பது பொதுச்சொத்து, அதை விற்பதற்கு அரசுக்கு உரிமையில்லை” என்பதுதான். உலகின் பல நாடுகளில் தண்ணீர் பொதுச்சொத்தாகவே இருக்கிறது. ஐ.நா. சபையும் தண்ணீர் வழங்குவதை, அடிப்படை மனித உரிமையாகக் குறிப்பிட்டிருக்கிறது.


தண்ணீருக்கு விலை வைப்பது என்பது, நம் உயிரை விலை பேசுவது போன்றது. எனவே, தமிழகத்தில் தண்ணீர் விற்பனையை அனைத்து வகைகளிலும் தடை செய்து, தண்ணீர் பொதுச்சொத்து என்று சமூகஉரிமையை நிலைநாட்டி தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும்.


தமிழக அரசு, தனியார் தண்ணீர் விற்பனையை தடைசெய்ய வேண்டும். மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட தேசிய தண்ணீர் வரைவுக் கொள்கை – 2012யை திரும்பப் பெற வேண்டும். தமிழக அரசு பாட்டில் குடிநீர் விற்பனை முயற்சியை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment