Friday, 13 September 2013

உன்னோடு ஒருநாள் - திரை விமர்சனம்!



தனியார் எப்.எம். ஒன்றில் அர்ஜுனும், ஜிப்ரானும் நண்பர்களாக பணிபுரிகின்றனர். அதே அலுவலகத்தில் வேலைக்கு சேர்கிறார் நாயகி நீலம். ஜிப்ரான் பெண்களுடன் சகஜமாக பழகக்கூடியவர். இருப்பினும் நாயகி மீது தனி பிரியம் கொள்கிறார். அதேவேளையில், அர்ஜுனுடனும், ஜிப்ரானுடனும் நாயகி நெருங்கி பழகுகிறார்.

ஜிப்ரான் ஒரு கட்டத்தில் நாயகியிடம் தன் காதலை சொல்ல, அவள் மறுக்காமல் அதை ஏற்றுக் கொள்கிறாள். ஒருநாள் ஜிப்ரான் எதார்த்தமாக ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பதை தவறாக புரிந்துகொண்ட நாயகி, அவனை வெறுத்து ஒதுக்குகிறாள்.

அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அர்ஜுன், நாயகியிடம் தன் காதலை கூறுகிறான். காதலில் தோல்வியடைந்த நாயகிக்கு, அர்ஜுனின் ஆறுதல் வார்த்தைகள் பிடித்துப் போய்விட, அவனை காதலித்து, திருமணமும் செய்து கொள்கிறாள்.

இதனால் மனவேதனையடைந்த ஜிப்ரான் தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்று விடுகிறான். நீலம் மீதான காதலை மறக்கமுடியாத ஜிப்ரான் மறுபடியும் சொந்த ஊருக்கு திரும்புகிறான். நீலமை சந்தித்து தன் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறுகிறான். இதனை புரிந்துகொண்ட நாயகி அவனிடம் நெருக்கம் காட்டுகிறாள். தான் திருமணமானவள் என்று அறிந்திருந்தும், அவனுடன் கள்ள உறவிலும் ஈடுபடுகிறாள்.

இது ஒருநாள் அர்ஜுனுக்கு தெரிந்துவிடுகிறது. இதன்பிறகு அர்ஜூன் என்ன முடிவெடுத்தான்? ஜிப்ரான்-நீலம் ஆகியோருக்கு என்ன முடிவு கிடைத்தது? என்பதை சஸ்பென்ஸ்-திரில்லருடன் சொல்லியிருக்கிறார்கள்.

நாயகர்களாக அர்ஜுன் விஜயராகவன், ஜிப்ரான் செல்மான் இருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். அர்ஜுனின் கண்கள்தான் அவருக்கு பிளஸ். இவருக்கு நண்பனாக வரும் ஜிப்ரான் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை திறம்பட வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதாநாயகியாக நடித்துள்ள நீலம் மும்பை மாடல் அழகி. தமிழ், தெலுங்கில் சில படங்களில் தலைகாட்டியுள்ளார். இந்த படத்தில் இவர் அழகாக வலம் வருகிறார். இவருடைய நடிப்பும் நேர்த்தியாக உள்ளது.

இயக்குனர் துரை காத்திகேயன், ரொமாண்டிக், சஸ்பென்ஸ், திரில்லர் படமாக எடுத்துள்ளார். படத்தில் அடுத்து என்ன  நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருக்கிறது. சமீபத்தில் விபத்து ஒன்றில் இவர் இறந்துவிட்டாராம். நல்ல இயக்குனரை தமிழ் திரையுலகம் இழந்துவிட்டது என்றே சொல்லலாம்.

அறிமுக இசையமைப்பாளர் சிவப்பிரகாசம் இசையில் பாடல்கள் கேட்கலாம் என்ற ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். விஜயராஜ் ஒளிப்பதிவில் பாடல்களும், காட்சியமைப்பும் பிரமிக்க வைக்கின்றன.

மொத்தத்தில் ‘உன்னோடு ஒருநாள்’ ஜாலியான பயணம்.

0 comments:

Post a Comment