Friday, 13 September 2013

நானும் ரஜினியும் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தால் ஆட்டோவில்தான் வந்து கொண்டிருப்போம்: கமல் பேச்சு

நானும் ரஜினியும் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தால் ஆட்டோவில்தான் வந்து கொண்டிருப்போம்: கமல் பேச்சு

நினைத்தாலே இனிக்கும்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் கமலஹாசன் பேசியதாவது:-

இவ்விழாவிற்கு நினைத்தாலே இனிக்கும் படக்குழுவினர் சார்பாக வந்திருக்கிறேன். சகோதரர் ரஜினிகாந்த் இந்த விழாவுக்கு வரமுடியவில்லை. அவர் சார்பாகவும் நான் வந்திருக்கிறேன். அதுபோல், நான் வரமுடியாத நிகழ்ச்சிகளுக்கு என் சார்பாக அவர் கலந்து கொள்வார். இப்படித்தான் நாங்கள் வளர்ந்திருக்கிறோம்.

இந்தப் படத்தில் இடம்பெறும் ‘எங்கேயும் எப்போதும் சந்தோஷம் சங்கீதம்’ என்ற பாடல் சத்யா ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்பு இடைவேளையின்போது ஸ்டுடியோவின் வெளியே வந்து ரஜினியிடம், நாம் ஒரு சம்பளத்தை இருவரும் பங்கிட்டு வாங்கிக் கொள்கிறோம். நீ ஒரு திரை நட்சத்திரம், நான் ஒரு நடிகன். நாம் சந்திக்கும்போது சந்திக்கலாம். நாம் இருவரும் தனித்தனியாக நடித்தால் நன்றாக இருக்கும். இதை அனுபவிக்கணும் என்று கூறினேன். அதற்கு அவரும் சம்மதித்தார்.

தனித்தனியாக நடித்ததால் இன்று அதிக சம்பளம் வாங்குகிறோம். ஒன்றாக நடித்திருந்தால் ஆட்டோ ரிக்ஷாவில்தான் வந்துகொண்டிருப்போம். சினிமாவில் இந்த வியூகத்தை புரிந்து கொண்டு செயல்பட்ட இரண்டு சகோதரர்களின் கதைதான் என்னுடைய கதையும், ரஜினியின் கதையும். இந்த வெற்றிக்கு பலபேர் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். அதில் முதலாவது நபர் பாலச்சந்தர் என்று சொல்வதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

பாலச்சந்தரை பார்த்து இயக்குனராக வேண்டும் என்று வந்தவன்தான் நான். இன்று என்னை இந்தியாவின் சிறந்த இயக்குனர் என்று சொல்கிறார்கள். அதற்கு வித்திட்டவர், பாலபாடம் போல் கற்றுக்கொண்டது எல்லாம் பாலச்சந்தரிடம்தான். இந்த அதிர்ஷ்டம் இங்குள்ள பல இயக்குனர்களுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் எனக்கு கிடைத்த தற்பெருமை.

அவரிடம் நான் ஒன்றும் கற்றுக் கொள்ளவில்லை என்று சொன்னால் என்னைவிட மடையன் யாருமில்லை. கொஞ்சம் கற்றுக் கொண்டேன் என்று சொன்னால் நான் சோம்பேறி என்று அர்த்தம். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இன்று என்னிடம் இருக்கும் பல விஷயங்கள் அவரிடமிருந்து கற்றுக் கொண்டதுதான்.

அவர் ஒரு அபாரமான நடிகர். நல்லவேளை அவர் நடிக்க வரவில்லை. தற்போது அந்த திறமையை பயன்படுத்திக் கொள்ளவேண்டிய நேரமும் வந்துவிட்டதாக எண்ணுகிறேன். அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. அது விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறேன். அவருடைய சம்மதத்துக்காக காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

0 comments:

Post a Comment