Thursday, 14 November 2013

வான்கடே அதிர களமிறங்கினார் சச்சின்!


தனது 200வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் சச்சின் களமிறங்கினார். வான்கடே அதிர அவர் களமிறங்கிய காட்சி மெய் சிலிர்க்க வைத்தது. அவர் களமிறங்கிய போது அரங்கம் முழுவதும் ரசிகர்கள் எழுந்து நின்று கை தட்டி சச்சினை உற்சாகப்படுத்தினர். மேற்கு இந்திய தீவு அணி வீரர்களும் ஒன்று சேர்ந்து கைதட்டி சச்சினை வரவேற்றனர். அவர் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கி பேட்டிங்கில் அசத்தினார். இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கரின் 200வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இது என்பதால், அவரது சரித்திர சாதனையில் தாங்களும் பங்கு கொண்டதற்கு சாட்சியமாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இப்போட்டியை பார்ப்பதற்காக வான்கடேயில் இன்று குவிந்தனர்.

மும்பை வான்கடேவில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்திய தீவு அணி, இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் முதல் இன்னிங்சில் 182 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சச்சினின் கடைசி மற்றும் 200வது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய மேற்கு இந்திய தீவு அணி ஓஜா மற்றும் அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 182 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பந்துவீசிய ஓஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

சச்சின் 38 ரன்களுடனும், புஜரா 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். சச்சின் சந்தித்த ஒவ்வொரு பந்துகளும் ரசிகர்கள் கர ஒலிகளில் அரங்கமே அதிர்ந்தன. இன்றைய ஆட்டத்தில் 6 பவுண்டரி அடித்து அசத்தினார்.

நாளையும் வான்கடேவில் திருவிழா தான்...

இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆட்டமிழக்காமல் சச்சின் இருப்பதால் நாளை வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதும் எந்த வித சந்தேகமும் இல்லை.

சதம் அடிப்பாரா சச்சின்

தற்போது சிறப்பாக ஆடி வரும் சச்சின் சதம் அடிக்க வேண்டும் என்று உலக முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். கோடி கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை சச்சின் நாளை நிறைவேற்றார் என எதிர்பார்க்கலாம்.

0 comments:

Post a Comment