Thursday, 14 November 2013

சில நிமிடங்களிலேயே பணம் அனுப்பும் செல்போன் வழி பரிமாற்றம் !


சில நிமிடங்களிலேயே பணம் அனுப்பும், செல்போன் வழியிலான பணப் பரிமாற்றம் என்ற புதிய சேவையை இந்திய தபால் துறை தமிழகத்தில் நாளை அறிமுகம் செய்கிறது.

 தில்லி, பஞ்சாப், பிகார், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், குஜராத், ஹரியானா, மத்திய பிரதேசம், இமாசல பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட இச் சேவை தற்போது தமிழகத்திலும் நடைமுறைக்கு வருகிறது. தபால் துறையின் தென் மண்டலத்தில் 95 தபால் நிலையங்களிலும், அதில் மதுரை கோட்டத்தில் 32 தபால் நிலையங்களிலும் இச் சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.

 செல்போன் வழி பணப்பரிமாற்ற சேவையைப் பயன்படுத்த விரும்புவோர், இச் சேவை வழங்கும் தபால் நிலையத்தில் பணத்துடன் தங்களது செல்போன் எண்ணையும், பணம் அனுப்ப வேண்டியவரின் முழு முகவரி, செல்போன் எண்ணையும் குறிப்பிட்டு அதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

 பணம் பெறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதன் விவரம் பணம் அனுப்புவருக்கும், பணம் பெற வேண்டியவருக்கும் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலமாக அனுப்பி வைக்கப்படும். அதில் பணப் பரிமாற்ற குறியீட்டு எண் குறிப்பிடப்பட்டிருக்கும். மேற்படி எஸ்.எம்.எஸ். பெறப்பட்ட நபர், அருகில் உள்ள தபால் நிலையத்தில் பணப் பரிமாற்ற குறியீட்டு எண்ணுடன் கூடிய குறுந்தகவலைக் காண்பித்து பணம் பெற்றுக் கொள்ளலாம். பணம் பெற வேண்டிய நபர் அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் அடையாள அட்டையுடன் சென்று தபால் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு பரிமாற்ற குறியீட்டு எண்ணுடன் வந்துள்ள குறுந்தகவலைக் கொண்டு வருவது அவசியம்.  இப்போது நடைமுறையில் இருக்கும் மணியார்டரில் தபால்காரர் வீட்டுக்கே வந்து பணம் கொடுப்பார். ஆனால், சம்பந்தப்பட்ட நபர் மட்டுமே பணத்தைப் பெற முடியும். தபால்காரருக்கு அன்பளிப்பாக பணம் கொடுக்க வேண்டியிருக்கும்.

புதிய சேவையில் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் பெற்றுக் கொள்ளலாம். அதோடு, பணம் அனுப்பிய சில நிமிடங்களிலேயே பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.  மணியார்டர் அனுப்பும்போது ரூ.100-க்கு ரூ.5 கமிஷன் தொகையாகப் பெறப்படுகிறது. செல்போன் வழி பண பரிமாற்றத்தில் ரூ.1000 முதல் ரூ.1,500 வரை ரூ.40, ரூ.1501 இல் இருந்து ரூ.5 ஆயிரம் வரை ரூ.70, ரூ.5,001 இல் இருந்து ரூ.10 ஆயிரம் வரை ரூ.100 மற்றும் சேவை வரி சேர்த்து கமிஷன் தொகையாக பெறப்படும். இது மணியார்டருக்கான கமிஷன் தொகையைக் காட்டிலும் குறைவாகும்.

 அனுப்பிய தொகையை இரு வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட நபர் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் 15 ஆவது நாள், அனுப்பப்பட்ட தபால் நிலையத்திற்கே பணம் திரும்பச்சென்றுவிடும். பணம் அனுப்பிய நபர் அங்கு சென்று பெற்றுக் கொள்ளலாம்.

 தமிழகத்தில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படும் இச்சேவையை, மதுரையில் அரசரடி, மதுரை, தல்லாகுளம் ஆகிய தலைமை தபால் நிலையங்களிலும், சில குறிப்பிட்ட துணை தபால் நிலையங்களிலும் பெறலாம். இச் சேவை வழங்கப்படும் தபால் நிலையங்களின் விவரத்தை ஜ்ஜ்ஜ்.க்ர்ல்ம்ர்க்ஷண்ப்ங்.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

0 comments:

Post a Comment